மக்களவைத் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்றால். அதனை சரிகட்ட திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அரசு அமைக்க மோடி சார்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள் களம் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2019 மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர், பாஜக அரசு இதேபோன்ற மெஜாரிட்டி பலத்துடன் அமைய வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. முக்கியமான மாநிலக் கட்சிகள்தான் இந்த தேர்தலில் அதிக பலம் பெறப் போகின்றன. எனவே பாஜகவுக்கு பெரும்பான்மைக்கும் குறைவான இடங்கள் கிடைத்தால், அக்கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க தேவைப்படும் இடங்களை மாநிலக் கட்சிகளிடம் இருந்துதான் பெற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது..
தி வயர் இணையதள இதழைச் சேர்ந்த பத்திரிகையாளரான ரோஹினி சிங், இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் திமுகவை பாஜவுக்காக தொழிலதிபர்கள் அணுகி வருகிறார்கள் என்ற செய்தியை தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
அதாவது தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கு மெஜாரிட்டி குறைந்தால், பாஜக ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிக்க முன் வரவேண்டும் என்று மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் திமுகவை அணுகியிருக்கிறார். ஆனால் அந்த கோரிக்கையை திமுக மறுத்துவிட்டது என்றும் இந்தத் தகவலை காங்கிரஸ் தலைமைக்கும் திமுக தெரியப்படுத்திவிட்டது எனனும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதே போல் திமுகவை மட்டுமல்ல இன்னும் ஒரு முக்கியமான எதிர்க்கட்சித் தலைவரையும் தொழிலதிபர் ஒருவர் அணுகி பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு கோரியிருக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதமே மோடிக்கு மிக நெருக்கமான முகேஷ் அம்பானி திமுக தலைவர் ஸ்டாலினை சென்னை வந்து வீடு தேடிச் சென்று சந்தித்தார்.. இவர் தன் மகன் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக ஸ்டாலினை சந்தித்தார் என்று சொல்லப்பட்டது.
அதற்கு முன் ஜனவரி 25 ஆம் தேதியே ரத்தன் டாட்டா ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். எப்போதுமே தொழிலதிபர்களின் சந்திப்புகளுக்கு பல அர்த்தங்கள் இருக்கும். இந்த வகையில் அந்த சந்திப்புகளின் தொடர்ச்சியாகவே, இப்போது நடைபெறும் கார்ப்பரேட் ஆட்டம் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள் .
எது எப்படியோ மோடிக்கு எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில் கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ஸ்டாலின், நிச்சயமாக கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு கட்டுப்படுவாரா ? என்பது போகப் போகத்தான் தெரியும்.