கேபிள் டி.வி. கட்டண உயர்வை கையில் எடுத்த திமுக... பெண் வாக்களார்களை குறி வைக்கும் ஸ்டாலின்!

By Asianet TamilFirst Published Apr 15, 2019, 8:10 AM IST
Highlights

பெண்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் டி.வி. சீரியல்கள் முக்கியத்துவம் பிடித்துவிட்டன. கேபிள் டிவி கட்டண உயர்வு பெண்களை கொதிப்படைய செய்திருப்பதால், கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தில் திமுக இதை கையில் எடுத்துள்ளது.
 

பெண்கள் வாக்குகளைக் கவரும் வகையில் கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தில் கேபிள் டிவி கட்டண உயர்வைப் பற்றி  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசத் தொடங்கியிருக்கிறார்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசு கேபிள் நிறுவனம் அமைக்கப்பட்டு, அதன் மூலம் வீடுகளுக்கு கேபிள் இணைப்புகள் வழங்கப்பட்டன. மிகக் குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி.யைப் பார்க்க இது வழிவகுத்தது. தொடக்கத்தில் 70 ரூபாய் வசூலிக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை 125 - 175 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுவந்தது. குறைந்த கட்டணத்தில் கேபிள் டி.வி. பார்க்க கிடைத்த வாய்ப்பு அதிமுகவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.

 
இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவால் ட்ராய் அமைப்பின் அறிவிப்புபடி விரும்பிய சேனல்களை பார்க்கும் முறை கடந்த பிப்ரவரியில் அமல்படுத்தபட்டது. இந்த முறையினால், வீடுகளில் சொந்தமாக டிடிஎச் வைத்திருப்பவர்களுக்குக் கட்டணம் குறைந்தது. ஆனால், பெரும்பான்மையானோர் பயன்படுத்தும் கேபிள் டி.வி.கட்டணம் எகிறியது. தற்போது தமிழக கேபிள் டி.வி. நிறுவனம் மூலம் நிகழ்ச்ச்களைப் பார்ப்போருக்கு கட்டணம் 320 ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டண உயர்வுக்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது. 
அதிமுகவுக்கு ஆதரவு தேடி தந்த கேபிள் டி.வி. கட்டணம், இப்போது எதிராக மாறத் தொடங்கியிருக்கிறது. இந்த விஷயத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். வேலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் இந்த விஷயம் பற்றி பேசினார். “பெண்கள் எல்லாம் டிவி பார்த்து மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இப்போ திடீரென்று கேபிள் டி.வி. கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். இதற்கெல்லாம் மோடி அரசுதான் காரணம். காங்கிரஸ் அரசு வந்தால், கேபிள் டிவி கட்டணம் பழையபடி குறைக்கப்படும். அதனால், திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள்” என்று பேசினார்.
இதேபோல கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரமும், ‘கேபிள் டி.வி. கட்டணத்தைக் குறைப்பேன்’ என்று பிரசாரம் மேற்கொண்டார். எதிர்க்கட்சிகள் செய்யும் இந்தப் பிரசாரத்துக்கு அதிமுக கூட்டணியால் பதிலடி தர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. கேபிள் டி.வி. கட்டண உயர்வைப் பற்றி ஆளுங்கட்சி எதையும் பேசுவதில்லை. 
பெண்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் டி.வி. சீரியல்கள் முக்கியத்துவம் பிடித்துவிட்டன. கேபிள் டிவி கட்டண உயர்வு பெண்களை கொதிப்படைய செய்திருப்பதால், கடைசி கட்ட தேர்தல் பிரசாரத்தில் திமுக இதை கையில் எடுத்துள்ளது.

click me!