
அண்ணா அறிவாலயத்துக்கு, சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மதிமுக பொது செயலாளர் வைகோ இன்று சென்றுள்ளார்.
தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக கடந்த மாதம் 29 ஆம் தேதி தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் சார்பில் மறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாணவர்களும் போராட்டக்களத்தில் குதித்தனர்.
பேருந்து கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி திமுக சார்பில் கடந்த 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 29 ஆம தேதி மறியல் போராட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில், அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், முத்தரசன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களுடன், மதிமுக பொது செயலாளர் வைகோவும் கலந்து கொண்டார். அண்ணா அறிவாலயத்துக்கு, சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ இன்று சென்றுள்ளார். அண்ணா அறிவாலயம் சென்ற வைகோவை, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு வரவேற்றார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வைகோ கலந்து கொண்டார். அண்மை காலமாகத்தான் வைகோ, திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.