கலைகட்டும் கல்லூரி வாசல்கள்.. 11 மாதங்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன.

By Ezhilarasan BabuFirst Published Feb 8, 2021, 10:11 AM IST
Highlights

அதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் கலை அறிவியல், தொழில்நுட்பம், எஞ்சினியரிங் பாடப்பிரிவுகளில் அனைத்து வகை மாணவர்களுக்கும் இன்று திங்கட்கிழமை முதல் நேரடி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்திருந்தது. 

கொரோனா ஊரடங்கு எதிரொலியாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்று முதல் கலை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் இன்ஜினியரிங் பாடதிட்டத்தில் அனைத்துவகை மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியு ள்ளன. கல்லூரி தொடங்கியுள்ளதால் மாணவர்கள் இன்று உற்சாகத்துடன் கல்லூரிக்கு வரத்தொடங்கியுள்ளனர். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. சுமார் 180க்கும் அதிகமான நாடுகள் இந்த வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 1 கோடிக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் பள்ளிகளை திறக்க முடிவு செய்த அரசு பெற்றோர்களின் அனுமதியுடன் இறுதியாண்டு தேர்வு எழுதும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகளை கடந்த 19ம் தேதி முதல் பள்ளிகளை திறந்துள்ளது. 

அதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களுக்கும் கல்லூரிகள் திறக்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் கலை அறிவியல், தொழில்நுட்பம், எஞ்சினியரிங் பாடப்பிரிவுகளில் அனைத்து வகை மாணவர்களுக்கும் இன்று திங்கட்கிழமை முதல் நேரடி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்திருந்தது. இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் தூய்மை மற்றும் நோய்த்தடுப்பு பணிகளில் கல்லூரி நிர்வாகங்கள் ஈடுபட்டு வந்தன. சனிடைசர்களை கொண்டு வகுப்பறைகளை தூய்மை செய்யும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் சென்னை உட்பட தமிழகம் முழுதும் அனைத்துவகை கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. 

ஆனால் சில கல்லூரிகள் ஏற்கனவே நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளில் தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரிகளை பொருத்தவரை வாரத்துக்கு ஆறு நாட்கள் வகுப்புகள் நடத்தப்படும் எனவும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் எனவும், உயர் கல்வித்துறை அரசாணை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!