
அதிமுகவில் ஓ.பி.எஸ். அணி, எடப்பாணி அணி என செயல்படுகிறது. இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. இதற்கிடையில், வரும் ஜூலை மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக இரு அணிகளும் ஒன்று சேர முயற்சித்து வருகின்றன. இதற்கு ஓபிஎஸ் தரப்பில், சசிகலா குடும்பத்தினரை வெளியேற்ற வேண்டும் என கூறப்பட்டது. இதைதொடர்ந்து டிடிவி.தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் எம்பி ரித்தீஷ், இன்று காலை சென்னை அடையாறில் உள்ள டிடிவி.தினகரன் வீட்டுக்கு சென்றார். அங்கு சில மணி நேரம் ஆலோசனை நடந்தது. பின்னர் வெளியே வந்த ரித்தீஷ், செய்தியாளர்களிடம் கூறியதாவது.
அதிமுகவில் இருந்து டிடிவி.தினகரனை யாரும் விலக்கி வைக்கவில்லை. அவரால் யாருக்கும் கஷ்டம் வரக்கூடாது என அவரே, விலகுவதாக கூறினார். ஆனால், அவர் இன்றும் கட்சியின் பொது செயலாளராக இருக்கிறார். பதவியை ராஜினாமா செய்யவில்லை.
ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியை இதுபோல் யாரும் வழி நடத்தி இருக்க முடியாது. இனி “சின்னம்மா, டிடிவி.தினகரன் இல்லாமல் கட்சியை கிடையாது”.
ஆட்சியையும், கட்சியையும் சீர்குலைக்கும் எண்ணம் யாருக்கும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் அதிமுகவில் இணைவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதை தடுக்கவும் இல்லை.
இன்றும் டிடிவி.தினகரன் தலைமையில் கட்சியும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சியும் சிறப்பாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.