தாத்தா, மகன், பேரன் சங்கதிகளெல்லாம் அதிமுகவில் கிடையாது... எத்தனை புதியவர்கள்- பாமரர்கள்..?

By Thiraviaraj RMFirst Published Aug 19, 2020, 1:36 PM IST
Highlights

 ‘தாத்தா, மகன், பேரன், கொள்ளுப்பேரன்..’ என்று பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்களே கோலோச்சுகிற மன்னர்கால சங்கதிகள் எல்லாம் அதிமுகவில் கிடையாது.

உண்மையான மக்கள் இயக்கம்! இந்திய அரசமைப்பு சட்டம், முகப்புரை (Preamble) இவ்வாறு கூறுகிறது:  ‘நாம் ஆகிய இந்திய மக்கள்… இந்த சாசனத்தை நமக்கு நாமே வழங்கிக் கொள்கிறோம்’. அரசமைப்பு சட்டம் வழங்கி இருக்கும் உரிமைகள் அனைத்தும், மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்டவை; யாரிடம் இருந்தும் இரவலாகவோ இனாமாகவோ பெற்றது இல்லை.

உரிமைகள் மட்டுமல்ல; அதிகாரங்களும் அப்படித்தான். உண்மையான மக்களாட்சியில் மக்களின் பிரதிநிதிகள், மக்களிடம் இருந்து வர வேண்டும். குறிப்பாக ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பங்கேற்கிற அமைப்புமுறை மட்டுமே சுதந்திரத்தை அர்த்தம் உள்ளதாக்கும்; அப்போதுதான், ஜனநாயக நெறிமுறைகள் செழிக்கும்.  என்ன அரிய தத்துவம்! எத்தனை ‘தலைவர்கள்’ குறைந்தபட்சம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்..? இதனை முழுமையாக அறிந்தது மட்டுமல்ல; முறையாக நடைமுறைப்படுத்திக் காட்டினார் எம்.ஜி.ஆர். அந்த வழியில் 
இருந்து சற்றும் விலகாமல் தொடர்ந்து நடைபோடுகிறது அதிமுக.
 
1977ஆம் அண்டு தன்னுடைய முதல் பொதுத் தேர்தலைச் சந்தித்தது அதிமுக. அப்போது தொடங்கி இன்று வரை, எத்தனை புதியவர்கள், அதிலும் எத்தனை பாமரர்கள், அதிமுக வேட்பாளர்களாகப் பொதுத் தேர்தல்களில் நிறுத்தப் பட்டு இருக்கிறார்கள்..? இதுவே, தமிழகத்தின் பிரதான எதிர்க் கட்சியில் எத்தனை புதியவர்கள் களம் கண்டார்கள்..? இவர்களில் எத்தனை பேர் உண்மையில் எந்த பின்புலமும் இல்லாது தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெற்றவர்கள்..?

ஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் அறிவிக்கப்படும் போதும், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்து, வரிசையில் நின்று, பொதுத் தேர்தலில் போட்டி இடுவதற்கான மனுக்கள் பெறுவோரில்  சாமான்யர்கள், பாமரர்கள் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதைப் பார்க்க முடியும். நான் சொல்வதில் நம்பிக்கை இல்லாதவர்கள், அப்போது வந்த நாளிதழ்களைப் புரட்டிப் பார்த்தால் இந்தத் தகவல் பளிச்செனத் தெரிந்து விடும்.
தெருவில் நாடோடிகளாகத் திரிகிறவர்கள், நடைபாதையில் படுத்து உறங்கும் ‘பிளாட்பார்ம்’ வாசிகள், வண்டி இழுப்போர், சுமை தூக்குவோர்.. என்று எல்லாரும் அதிமுகவில் மனுக்கள் வாங்கிச் செல்வதை ஆங்கிலப் பத்திரிகைகள் கூட படத்துடன் செய்தி வெளியிட்டு ஆச்சரியப்படுகின்றன.

 

இந்த நடைமுறைதான் அதிமுகவின் ஆகச் சிறந்த பலம். ‘தாத்தா, மகன், பேரன், கொள்ளுப்பேரன்..’ என்று பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்களே கோலோச்சுகிற மன்னர்கால சங்கதிகள் எல்லாம் அதிமுகவில் கிடையாது. ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் ‘அட்ரஸ் இல்லாதவன்’ என்று, பிரதான எதிர்க் கட்சியால் வசை பாடப் படும் வேட்பாளர்கள்தாம் அதிமுகவில் நிரம்பி வழிவார்கள்; வெற்றியும் பெறுவார்கள். அங்கே எல்லாம் அநேகமாக, எதிரணி வேட்பாளர்கள் ’பழம் தின்று கொட்டை போட்டவர்கள்’! அவர்கள் ஏன் தோற்றுப் போனார்கள்..? புதியவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள்..? 

விடை மிக எளிது. அடித்தட்டு மக்களை மதித்து நடக்கிற கட்சியாக, அவர்களில் ஒருவரையே வேட்பாளராக நிறுத்துகிறது அதிமுக. இதனால் மக்களின் அன்புக்கு உரியதாக விளங்குகிறது; வெற்றி மேல் வெற்றி பெறுகிறது. இதனை வெற்றிக்கான சூட்சுமம் என்று பார்ப்பதில்லை அந்த இயக்கம். மெய்யாலுமே மக்களின் பிரதிநிதிகள் ஆட்சி அதிகாரத்துக்கு வருவதை வரவேற்கிற கொள்கையை உயிர் மூச்சாய்க் கொண்டுள்ளது அதிமுக. இது பாமரர்களுக்கும் நன்கு தெரியும். அதனால்தான் அதிமுகவுக்கும் – அடித்தட்டு மக்களுக்கும் இடையிலான உறவு எப்போதும் வலுவாகவே இருந்து வருகிறது. 

1972இல் அதிமுக தொடங்கப் பட்டது. 1977இல் சட்டமன்றப் பொதுத் தேர்தலை சந்தித்தது. இதற்கு இடையில், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது; அப்போதே மாயத்தேவர் என்கிற புதுமுகத்தைக் களம் இறக்கினார் எம்.ஜி.ஆர். இத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று தனது தேர்தல் கணக்கைத் தொடங்கியது அதிமுக. இரண்டாவது இடத்தைப் பிடித்தார் ‘ஸ்தாபன காங்கிரஸ்’ வேட்பாளர் சித்தன். திமுக வேட்பாளராகப் போட்டி இட்டவர் மூன்றாவதுக்கு இடத்துக்குத் தள்ளப்பட்டார். முதல் களம் ஆயிற்றே… எதற்காக ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டும்..?  பிரபலமான யாரையாவது நிறுத்தினால் நன்றாக இருக்குமே என்றெல்லாம் எம்.ஜி.ஆர். கணக்குப் போட்டுப் பார்க்கவில்லை. 

இளையவர், புதியவர், பாமரர், படித்தவர் என்றால் உடனடியாக வேட்பாளராக எற்றுக் கொண்டு போட்டியிட வைக்கும் ‘எம்ஜிஆர் பாணி’ அதிமுகவின் நிரந்தர செயல் திட்டம் (action plan) ஆகிவிட்டது. முதன் முறையாக 1977இல் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று எம்ஜிஆர் முதல்வரானதில் இருந்து 2016இல் பதவியேற்ற தற்போதைய அரசு வரையில், புதுமுக எம்.எல்.ஏ.க்கள் அதிகம் கொண்ட கட்சியாக அதிமுக விளங்கி வருகிறது.

சட்டமன்றம் மட்டுமல்ல; நாடாளுமன்றத்திலும் அதிமுக, பெரும் எண்ணிக்கையில் புதுமுகங்களை அனுப்பிக் கொண்டு இருக்கிறது. இந்த சாதனை, இந்திய ஜனநாயகத்தில் மிக முக்கிய அத்தியாயம் ஆகும். 1972 அக்டோபர் 17 அன்று, அதிமுக தொடங்கப்பட்டு கடந்த 48 ஆண்டுகளில், எம்.ஜி.ஆர்., ஜானகி ராமசந்திரன், ஜெ. ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என்று 5 முதல்வர்களைத் தந்துள்ளது அதிமுக.

இது மட்டுமா..? 1977இல், தொடங்கி தற்போதுள்ள தனபால் வரை புதிய சபாநாயகர்கள், 1977இல் கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம். எச்.வி.ஹண்டே முதல் தற்போதுள்ள பல அமைச்சர்கள் வரையில் எத்தனை பேர், அதிமுகவில் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கின்றனர்..? ஆட்சியில்தான் இப்படி என்றால், கட்சி அமைப்பிலும் இதே  நடைமுறைதான்.கடந்த 48 ஆண்டுகளில் கட்சியின் மாநிலச் செயலாளர்கள், நகர, ஒன்றிய, வட்டச் செயலாளர்களில் எத்தனை எத்தனை புதுமுகங்கள்!
 
இளைஞர்கள், பெண்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்கள், இஞ்சினியர்கள் என்று சமுதாயத்தில் அத்தனை பிரிவினரும் மிகச் சாதாரண நிலையில் இருந்து படிப்படியாக கட்சியில் மேலே வந்தவர்கள் எத்தனை பேர்..?ஒப்பீட்டுக்கு மன்னிக்கவும். இதே போன்று வேறு ஒரு கட்சியில், அடிமட்டத்தில் இருந்து மேல் நிலைக்கு உயர்ந்தவர்கள் எத்தனை பேர்..? தமிழ்நாட்டின் பல நகரங்களில், பல கிராமங்களில், ‘எதிர்க் கட்சி’யில் இருக்கிற அடிமட்டத் தொண்டர்களில் எத்தனை பேர், தனது உயிரினும் மேலாகக் கருதுகிற கட்சியில், எளிதில் முன்னேறி வர முடிகிறது..?
அதிமுகவில் மட்டும் எப்படி இது சாத்தியம் ஆகிறது..? காரணம், அடிப்படையில் சாமான்யர்களின் கட்சியாகவே அதிமுக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. சாதி சமய பேதங்களுக்கு அப்பாற்பட்டு எல்லாருக்கும் சமவாய்ப்பு கிடைக்கிற விதத்தில் செயல்படுகிறது அதிமுக. ஒரு கோடிக்கும் மேலான தொண்டர்களைக் கொண்ட அரசியல் இயக்கத்தில், எங்கோ மூலையில் இருக்கும் ஏதேனும் ஒரு தொண்டன், இயற்கை மரணத்தால் மறைந்தாலும் கூட அன்னாரது குடும்பத்துக்கு, கட்சியில் இருந்து, நிவாரண நிதியாக 50,000 ரூபாய் வழங்கப் படுகிறது. 

ஜெயலலிதா தீவிரமாக நடைமுறைப் படுத்திய இந்தத் திட்டம், உலகளவில் எந்த அரசியல் இயக்கமும் முன்னெடுக்காத, தொண்டர் நலன் சார்ந்த மாபெரும் நல்வாழ்வுத் திட்டமா இல்லையா? இப்படி ஒவ்வொரு நிலையிலும் சாமான்யர்களை மனதில் கொண்ட மக்கள் இயக்கமாக செயல்பட வேண்டும் என்பதை எம்.ஜி.ஆர். கருத்தில் கொண்டார்; அதற்கு வடிவம் தந்தார்; விதிமுறைகள் வகுத்தார்; முழுவதுமாக செயல்படுத்திக் காட்டினார். அதன் பயன்… தமிழக அரசியலில், அசைக்க முடியாத ஆலமரமாக வளர்ந்து உயர்ந்து நிற்கிறது அதிமுக. 

மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் மக்கள் திலகம் உரைத்த அபாரமான திட்டம் ஒன்று, தற்போது ஒரு நாளிதழில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அது என்ன…? 
(வளரும்.

 

கட்டுரையாளர்: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.

click me!