யார் தலைமையில் கூட்டணி? பதுங்கி பாய்ந்த எடப்பாடியார்... அதிர்ச்சியில் பாஜக...!

By Selva KathirFirst Published Aug 29, 2020, 11:51 AM IST
Highlights


யார் தலைமையில் கூட்டணி  என்கிற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் கூட உறுதியாகவும் துணிச்சலாகவும் பதில் அளித்த நிலையில் இந்த கேள்விக்கு முதலமைச்சராக இருக்கும் எடப்பாடியார் தடுமாறியது தான் அதிமுகவினர் பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என்கிற பெயரிலேயே அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் களம் இறங்கின. கூட்டணியில் அதிக இடங்களில் அதிமுக போட்டியிட்டாலும் கூட்டணிக்கு தலைமை பாஜக தான் என்பது போன்ற தோற்றம் உருவாகியிருந்தது. ஆனால் தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றை அதிமுக தலைமையே இறுதி செய்ததால் கடைசியில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையில் இயங்கியது வெட்ட வெளிச்சமானது.

இந்த நிலையில் சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் அமைந்த கூட்டணி தமிழகத்தில் தற்போது வரை நீடிக்கிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்கின்றன. ஆனால் பாஜக தலைவராக முருகன் பதவியேற்ற பிறகு சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று பேசி வருகிறார். நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையில் தான் தமிழகத்தில் கூட்டணி செயல்பட்டது என்றும் அவர் கூறி வருகிறார்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பாஜக தான் தலைமை என்கிற அர்த்தத்தில் முருகன் இவ்வாறு பேசி வருவதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் கணிசமான தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து பேசிப் பெறுவதற்கான வியூகமாகவே கூட்டணிக்கு யார் தலைமை என்கிற பிரச்சனையை தற்போதே முருகன் எழுப்பியுள்ளதாக கூறுகிறார்கள். அதிமுக தலைமையில் கூட்டணி என்றால் எங்களுக்கு  கூடுதல் தொகுதிகளை கொடுக்க வேண்டும் என்று கேட்டு நிர்பந்திக்க இந்த வியூகத்தை முருகன் கையில் எடுத்துள்ளதாக சொல்கிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலை திருவாரூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பாஜகவினர் தங்கள் தலைமையில் தான் கூட்டணி என்று பேசி வருவது குறித்து முதலமைச்சர் எடப்பாடியாரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தேர்தல் வர இன்னும் நாள் இருக்கிறது, தேர்தல் நேரத்தில் தான் யார் தலைமையில் கூட்டணி, கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் என்பது எல்லாம் தெரியும் என்று எடப்பாடி பதில் அளித்தார். இந்த பதில் பலரையும் குறிப்பாக அதிமுகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஏனென்றால் எம்ஜிஆர் காலம் தொட்டு தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என எதுவாக இருந்தாலும் அதிமுக தான் தலைமை தாங்கும்.

ஆனால் இதற்கு மாறாக தேர்தல் நேரத்தில் கூட்டணி தலைமை முடிவு செய்யப்படும் என்று எடப்பாடியார் கூறியுள்ளார் என்றால் பாஜக தலைமையை ஏற்க அதிமுக தயாராகிவிட்டதா என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் நேற்று பிற்பகலில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம பேசினார். அப்போது அவரிடமும் யார் தலைமையில் கூட்டணி என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு இதில் சந்தேகம் எதற்கு, அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும், இது தான் கடந்த கால வரலாறு என்று திட்டவட்டமாக கூறினார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் தேர்தல் நேரத்தில் கூட்டணி தலைமை குறித்து முடிவு என்று முதலமைச்சர் கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கும் திட்டவட்டமாக முதலமைச்சர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்று தெரியாது, ஆனால் நிச்சயமாக அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்தார். ஜெயக்குமார் அளவிற்கு கூட முதலமைச்சருக்கு கூட்டணி விஷயத்தில் தெளிவு இல்லையா? என்று இதன் பிறகு விமர்சனங்கள் எழுந்தன. மேலும் யார் தலைமையில் கூட்டணி என்பதற்கு அதிமுக தலைமையில் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே தஞ்சையில் நேற்று மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடம் மீண்டும் கூட்டணி தலைமை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதில்அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்தர் பல்டியாக, அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று பதில் அளித்தார். காலையில் தேர்தல் நேரத்தில் கூட்டணி தலைமை குறித்து முடிவு என்று கூறிய எடப்பாடியார் திடீரென மாலையில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று பல்டி அடித்ததற்கு காரணம் அதிமுக கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பு எழுந்தது தான் என்கிறார்கள். கூட்டணி தலைமை விவகாரத்தில் கூட பாஜகவிற்கு பயந்து கொண்டு அதிமுக இருந்தால் எப்படி அரசியல் செய்வது என்று மூத்த அமைச்சர்கள் சிலரே அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சொல்கிறார்கள்.


இதனால் தான் அதிமுக தலைமையில் கூட்டணி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது முதல் பேட்டிக்கு முரணாக இரண்டாவது பேட்டி அளித்துள்ளதாக கூறுகிறார்கள். அதே சமயம் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் டெல்லி மேலிடத்தின் ஆதரவு தேவை என்பதால் தான் கூட்டணி தலைமை விவகாரத்தில் எடப்பாடியால் நிதானத்தை கடைபிடித்ததாகவும் ஆனால் அதிமுகவிலேயே அதற்கு எதிர்ப்பு ஏற்பட்டதால் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவும் கூறுகிறார்கள். இருப்பினும் முதலமைச்சரின் இந்த பதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சற்று அதிர்ச்சியடைய வைத்துள்ளதாகவும் தெரிகிறது. 

click me!