
அதிமுகவில் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். என இரு அணிகளாக செயல்படுகின்றன. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவுடன், சசிகலா முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், சொத்து குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த்து. இதைடுத்து, சசிகலா, பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, சிறைச்சாலையில் சரணடையும் முன் சசிகலா, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்றார். அங்கு அவரது சமாதியில், 3 முறை அடித்து சபதம் செய்தார். இச்சம்பவம் அதிமுகவினர் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பெரிய காஞ்சிபுரம் பல்லவர்மேடு மேற்கு பகுதியை சேர்ந்தவர் மூசா (37). அதிமுக தொண்டர். இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு பானு என்ற மகளும், சையத் என்ற மகனும் உள்ளனர். கடந்த 15ம் தேதி மாலை மூசா, காஞ்சிபுரம் வணிகர் வீதிக்கு சென்றார்.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டும். ஜெயலலிதாவின் சமாதியில், சசிகலா சத்தியம் செய்ததால், ஓ.பி.எஸ்ஸுக்கு ஆபத்து நேரிடம் என கூறி, அங்கிருந்தவர்களிடம் புலம்பினார்.
மனம் நொந்து பேசி கொண்டிருந்த அவர், திடீரென மறைத்து கேனில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றி மூசா அலறி துடித்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூசா, நேற்று மாலை இறந்தார்.
புகாரின்படி பெரிய காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.