கடுகடுப்பில் இபிஎஸ்! பதற்றத்தில் ஓபிஎஸ்! அவசரமாக கூடிய நிர்வாகிகள்! அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது என்ன?

By Selva KathirFirst Published Aug 14, 2020, 10:05 AM IST
Highlights

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற விவாதம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ராயப்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் கூடி நடத்திய ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
 

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற விவாதம் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ராயப்பேட்டையில் உள்ள தலைமையகத்தில் கூடி நடத்திய ஆலோசனை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் தனது விருப்பத்திற்கு மாறான நிகழ்வுகள் அரங்கேறி வருவது எடப்பாடி பழனிசாமியை மிகவும் அப்செட்டாக்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே பெரிய அளவில் எந்த நிகழ்விலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. வீட்டில் இருந்தபடியே கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, ஐடி விங் நிர்வாகிகளுடன் சந்திப்பு, தேர்தல் வியூகம் போன்றவற்றில் அவர் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் என்கிற விஷயத்தில் அமைச்சர்கள் சிலர் பின்வாங்கியது எடப்பாடியை கடுகடுக்க வைத்துவிட்டதாக சொல்கிறார்கள்.

தேர்தலுக்கு சரியாக ஆறு மாதங்கள் இருக்கும் சமயத்தில் பிரச்சாரத்தை துவக்குவது என்று எடப்பாடி பழனிசாமி டீம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அந்த சமயத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குங்கள் என்றே பிரச்சாரத்திற்கான வியூகம் வகுக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்த அடுத்த சில நாட்களில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்டச் செயலாளர்களை அழைத்து பேசவும் எடப்பாடி திட்டமிட்டிருந்தார். ஆனால் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியால் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவிட்டது.

இதனால் அமைச்சர்கள் சிலரும் கூட முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் அனைவரும் கூடி முடிவெடுப்போம் என்று கூற ஆரம்பித்துவிட்டனர். தான் மிகவும் நம்பிய, தனக்கு நெருக்கமான அமைச்சர்களாக கருதும் சிலர் கூட இந்த விஷயத்தில் தனக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி டென்சனில் இருப்பதாக சொல்கிறார்கள். அதே சமயம் இதையே எதிர்பார்த்து காத்திருந்த ஓபிஎஸ் கூட இந்த தருணத்தை மிஸ் செய்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ளார். ஏற்கனவே அதிமுக ஒன்றிணைந்த போது சில நாட்களில் முதலமைச்சர் பதவி உங்களை தேடி வரும் என்று டெல்லி மேலிடம் அவரிடம் உறுதி மொழி கொடுத்திருந்ததாக ஒரு பேச்சு உண்டு.

இதற்காக ஒரு முறை டெல்லி சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய ஓபிஎஸ் அதன் பிறகு சரியான நேரத்திற்கு காத்திருக்கிறார் என்றே சொல்லலாம். சட்டமன்ற தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் தன்னை முன்னிலைப்படுத்த அவர் வியூகங்களை வகுத்தாலும் எடப்பாடியின் வியூகங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலையே இருந்தது. ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்பதை தெரிந்து கொண்டு தற்போது பதற்றத்துடன் ஓபிஎஸ் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார். இதனை அடுத்தே நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடைபெற்றது.

கட்சியில் ஒரு பிரச்சனை என்றால் அதிமுக தலைமையகத்தில் வழக்கமாக கூடும் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சரியாக வந்துவிட ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தலைமையகத்திற்கு வரவில்லை. ஆனால் சிவி சண்முகம் கட்சித் தலைமையகத்திற்கு வந்திருந்தார். ஐவர் குழுவில் சிவி சண்முகம் இடம்பெறவில்லை என்றாலும் கூட நேற்று அவரது வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கூவத்தூரில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்கிற கேள்வி எழுந்த போது செங்கோட்டையனை ஓரம்கட்டி, எடப்பாடியை முன்னிறுத்தியதில் சண்முகத்திற்கு முக்கிய பங்கு உண்டு.

அப்போது முதலே சிவி சண்முகம் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவராக பார்க்கப்படுகிறார். இதனால் நேற்றைய கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான கருத்துகளே அதிகம் முன்வைக்கப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ் ஆதரவாளரான கே.பி.முனுசாமி தான் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். கட்சி அனுபவத்தில் சிவி சண்முகம், வைத்திலிங்கத் விட கே.பி.முனுசாமி கெட்டிக்காரர். சசிகலாவிற்கு எதிரான ஓபிஎஸ்சின் நடவடிக்கைகளை வடிவமைத்தவர்களில் முனுசாமி மிக முக்கியமானவர்.

எனவே நேற்று முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான ஆலோசனையின் போது முனுசாமி தனது கருத்துகளை மிகவும் ஆனித்தனமாக எடுத்து வைத்ததாக சொல்கிறார்கள். உள்ளே என்ன நடந்தது என்பதில் வெவ்வேறு தகவல்கள் நிலவுகின்றன. ஆனால் இந்த மூன்று பேர் ஆலோசனையின் போது உள்ளே ஒரு ஈ கூட நுழைய முடியாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக சொல்கிறார்கள். மேலும் உள்ளே நடைபெற்ற ஆலோசனை குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் கூட மூவரும் எந்த தகவலையும் பகிர்ந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

அதே சமயம் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள முதலமைச்சர் வேட்பாளர் மிக முக்கியம் என்று மூவரும் ஒப்புக் கொண்டது கே.பி.முனுசாமியின் செய்தியாளர் சந்திப்பின் மூலம் உறுதியானது. ஆனால் அது யார், அவரை எப்படிதேர்வு செய்வது, யார் அறிவிப்பது என்பதில் குழப்பம் நிலவுவதாகவும் அது குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்கிறார்கள். அதுவரை எடப்பாடி கடுகடுப்பாகவும், ஓபிஎஸ் பதற்றத்துடனும் காத்திருப்பதை தவிரவேறு வழியில்லை.

click me!