எடப்பாடி கையில் பூனைக்குட்டியானதா பா.ம.க?: போன வருஷம் விமர்சன வீறாப்பு! இந்த வருஷம் நமத்துப் போன மத்தாப்பு..

By Vishnu PriyaFirst Published Feb 20, 2020, 6:10 PM IST
Highlights

அடுத்த வருடம் வர இருக்கும்  சட்டமன்ற தேர்தலில் கணிசமான சீட்டுகளும் வேண்டும். இதெல்லாம் இருக்குறப்ப எப்படி எடப்பாடியாரை திட்ட முடியும்? பூங்கொத்துதான் கொடுக்க முடியும்!” 

’இரு திராவிட கட்சிகளும் இந்த தமிழகத்தை நாசம் செய்துவிட்டார்கள். எங்கள் கையில் ஒரு முறை ஆட்சியை கொடுத்துப் பாருங்கள். எந்த சுயநலனும் இல்லாமல், பொது நலனுக்காக உயிரைக் கொடுத்து சேவை செய்வோம்.’என்று தய்யா தக்கான்னு சவுண்டு விட்ட பா.ம.க., இன்றோ எடப்பாடியாரின் கையில் பூனைக்குட்டியாக மடங்கி, ஒடுங்கி சுருண்டுவிட்டது! என போட்டுத் தாளிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 
என்னா மேட்டரு?.......”ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் ஆளும் அ.தி.மு.க.வை கன்னாபின்னான்னு கரித்துக் கொட்டிய கட்சிகளில் இரண்டு முக்கியமானவை. ஒன்று தி.மு.க. மற்றொன்று பா.ம.க. அதிலும் சில நேரங்களில் தி.மு.க.வை தாண்டி ஆளுங்கட்சியை ஆத்திரம் கொப்பளிக்க கூறு போட்டு பேசியது ராமதாஸின் கட்சி. 

 

குறிப்பாக கடந்த 2019ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் பண்ணி முடிக்கப்பட்டதும், அன்புமணி வெச்சு வெளுத்து வாங்கினார் அ.தி.மு.க.வை. சாதாரண வார்த்தைகளால் அல்ல, நாடி நரம்பெல்லாம் எடப்பாடி, பன்னீருக்கு எதிரான வெறித்தனம் ஊறிப்போன ஒருவரால் மட்டுமே அப்படி பேச முடியும்! எனும் அளவுக்கு இருந்தது அந்த பேச்சு. அதில் சில சாம்பிள்கள் இதோ....’ஜெயலலிதாவின் படம் போட்ட சூட்கேஸை தூக்கிட்டு வந்தால் எல்லா தெரிந்ததாக அர்த்தமாகிடுமா? எடப்பாடிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் நிர்வாகம்னா என்னான்னு தெரியுமா? நிதி நிலை என்றால் என்னன்னு தெரியுமா?  ஒன்றும் தெரியாத ஆட்களைத்தான் ஜெயலலிதா தன் அமைச்சரவையில் வைத்திருந்தார். கையெழுத்து போடு என்றால் போட வேண்டும், காலில் விழு  என்றால் விழ வேண்டும், டயரை நக்க வேண்டுமென்றால் நக்க வேண்டும். இவர்களைத்தான் மந்திரிகளாக வைத்திருந்தார்.’ என்று அன்புமணி ஆக்ரோஷம் காட்டியபோது அ.தி.மு.க.வே அதிர்ச்சியில் உறைந்தது. 

ஆனால் அதே ராமதாஸும், அன்புமணியும் இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் முடிந்த பிறகு, தங்கள் கட்சியின் நிர்வாகிகள் ஜி.கே. மணி மற்றும் ஏ.கே.மூர்த்தியை அனுப்பி, எடப்பாடியாருக்கு பொக்கே கொடுத்து பட்ஜெட்டை பாராட்டியுள்ளனர். ஒரு வருஷத்துக்குள்ளே எடப்பாடியாருக்கும், ஓ.பி.எஸ்.ஸுக்கும் நிர்வாக திறமை அதீதமா வந்துடுச்சா? ரெண்டு பேரும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றுட்டாங்களா? இல்லேன்னா இந்த பட்ஜெட்டின் மூலம் தமிழக மக்களின் துயரெல்லாம் நீங்கிடுச்சா? எதுவுமே இல்லை. சொல்லப்போனால் தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்து, ஒவ்வொரு தமிழன் தலையிலும் பாரம் ஏற்றப்பட்டிருக்குது. அப்படியானால் ஏன் பா.ம.க. எடப்பாடியாரை பாரட்டியிருக்குது?........வேறு ஒண்ணுமில்லை. 

போன தடவை எதிர்கட்சி வரிசையில் இருந்த பா.ம.க. இந்த முறை அ.தி.மு.க.வின் தோழமை கட்சி வரிசையில் இருக்குது. மேலும் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் கொடுத்திருக்குது ஆளுங்கட்சி. அதையும் தாண்டி அடுத்த வருடம் வர இருக்கும்  சட்டமன்ற தேர்தலில் கணிசமான சீட்டுகளும் வேண்டும். இதெல்லாம் இருக்குறப்ப எப்படி எடப்பாடியாரை திட்ட முடியும்? பூங்கொத்துதான் கொடுக்க முடியும்!”  என்கிறார்கள் விமர்சகர்கள். 
ஆனால் பா.ம.க.வினரோ ”இ.பி.எஸ். கையில் நாங்க எதுக்கு பூனைக்குட்டியாகணும்? வாய்ப்பே இல்லை. கூட்டணி தலைவனேயானாலும் தப்பு செய்தால் தட்டி கேட்போம், நல்லது செய்தால் தட்டிக் கொடுப்போம். கூட்டணிக்காக மடிஞ்சு போகும் பழக்கமில்லை. நாங்க பூனையல்ல புலி!” என்கிறார்கள். மியா........உர்ர்ர்ர்ர்ர்!

click me!