
கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு மட்டுமே உண்டு எனவும் என்னை நீக்கும் அதிகாரத்தை ஜெயக்குமாருக்கு யார் கொடுத்தது எனவும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சசிகலா அணி ஒ.பி.எஸ் அணி என இரண்டாக பிரிந்தது. பின்னர், சசிகலா சொத்துகுவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார்.
சிறைக்கு செல்லும் முன் எம்.எல்.ஏக்களை அழைத்து பேசி எடப்பாடியை முதல் நிலை வேட்பாளராகவும் தினகரனை துணை பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்து விட்டு சென்றார்.
தொடர்ந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை விவகாரத்தில் ஒ.பி.எஸ் தரப்பு குடைச்சல் கொடுக்கவே சின்னம் முடங்கியது.
இதையடுத்து முடங்கிய சின்னத்தை மீட்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றாக கூறி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர், எடப்பாடி தலைமயிலான அமைச்சரவை ஒ.பி.எஸ்சுடன் கூட்டு சேர்ந்து இரட்டை இலை சின்னத்தை மீட்க திட்டமிட்டது.
இதனிடையே தற்போது தினகரன் ஜாமில் வந்து கட்சியில் தொடர்ந்து செயலாற்றுவேன் எனவும் சசிகலாவுடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதற்கு எதிராக அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அமைச்சர்கள் 17 பேர் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
ஒன்றரை மணிநேர ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சருடன் 19 அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார் கட்சி நலனுக்காகவும் ஆட்சி நலனுக்காகவும் கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து விலக்குவதாக அறிவித்தோம் எனவும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக ஒருமித்த கருத்துடன் உள்ளோம் எனவும் தெரிவித்தார்.
இதனிடையே டிடிவி தினகரன் கூறியபடி பெங்களூர் சென்று சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளருக்கு பேட்டியளித்தார்.
அப்போது ஜெயக்குமாரின் அறிவிப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தினகரன், கட்சியில் இருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு மட்டுமே உண்டு எனவும் என்னை நீக்கும் அதிகாரத்தை ஜெயக்குமாருக்கு யார் கொடுத்தது எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், அதிமுகவின் பொதுச்செயலாளர் போல் தினகரன் செயல்படுவதாகவும், எங்களுடைய பொறுமையை பயன்படுத்தி கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இரு அணிக்கும் 2 மாதங்கள் நேரம் கொடுப்போம் எனவும், கட்சி பலவீனப்படாமல் கண்காணித்து வருவோம் எனவும் சசிகலா கூறியதாக தெரிவித்தார்.
அந்த 60 நாட்களில் என்னை சந்திக்க வரும் கட்சி நிர்வாகிகளை நானும் சந்தித்துக்கொண்டே இருப்பேன் எனவும், அமைச்சர்கள் தங்கள் சுய பயத்தினால் ஒதுக்க வேண்டும் என நினைப்பதாகவும் தினகரன் தெரிவித்தார்.