AIADMK: சின்னம்மா ‘ராகம்’… முடிவோடு களம் இறங்கும் சீனியர்ஸ்… வெலவெலக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்…

By manimegalai aFirst Published Dec 4, 2021, 9:00 AM IST
Highlights

சென்னை: அதிமுகவில் அடுத்த பிரளயமாக சசிகலா ஆதரவு நிலையை கட்சியின் முக்கிய சீனியர்கள் எடுத்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு ஷாக் தந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சென்னை: அதிமுகவில் அடுத்த பிரளயமாக சசிகலா ஆதரவு நிலையை கட்சியின் முக்கிய சீனியர்கள் எடுத்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு ஷாக் தந்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

ஆட்சியில் இருந்த போது ஏற்பட்ட உட்கட்சி நெருக்கடியை விட ஆட்சியை இழந்துவிட்ட தருணத்தில் அதிமுக அதிகளவு சந்தித்து வருகிறது என்று சொல்லலாம். கட்சியின் செயற்குழு கூட்டத்துக்கு முன்பு இருந்தே இத்தகைய நடவடிக்கைகள் வெளிவர ஆரம்பித்து இருக்கின்றன.

செயற்குழு கூட்டத்தின் முதல் நாள் கட்சியின் மூத்த உறுப்பினர் அன்வர் ராஜா தூக்கி அடிக்கப்பட்டார். ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டணியின் இந்த ஆக்ஷன் கட்சியின் சீனியர்களை உலுக்கி இருப்பதாகவே தெரிகிறது. சோழவந்தான் மாணிக்கம் மீது என்ன நடவடிக்கை? அன்வர் ராஜா மீது ஏன் இந்த ஆக்ரோஷம் என்று கேள்விகளும், அதிருப்திகளும் எழுந்தன.

இதை எல்லாம் தாண்டி இப்போது கட்சியில் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அறிவிப்புக்கு முன்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் கூட்டாக சேர்ந்து கொண்டு தங்களுக்கு ஏற்ப விதிகளை மாற்றி விட்டனர் என்ற குற்றச்சாட்டு இப்போது பூதாகரமாக எழுந்துள்ளதாக அதிமுகவில் குமுறல் வெடிக்க தொடங்கி இருக்கிறது.

கட்சியின் ஒட்டு மொத்த தலைமை பொறுப்பை இருவரும் கைப்பற்ற நடக்கும் வேலை தான் இது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். ஓபிஎஸ்சை இனி ஓரங்கட்டி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஆகும் நடவடிக்கைகளில் இபிஎஸ் இறங்கிவிட்டார் என்று கண்சிமிட்டுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

இவர்கள் இருவர் தவிர கட்சியின் பெரும்பாலான சீனியர்கள் சசிகலா ராகம் பாடி, அவருக்கு தூதுவிடும் வேலைகளில் இறங்கிவிட்டனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எக்காரணம் கொண்டு இருவரும் கட்சியை கைப்பற்ற விடக்கூடாது என்றும், இருவரின் முயற்சிக்கு எதிராக சசிகலாவை உள்ளே கொண்டு வரலாம் என்றும் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் முன்னோட்டம் தான் செல்லூர் ராஜூ ஆடியோ, அதற்கு மறுப்பு என அடுக்குகின்றனர் விஷயம் தெரிந்தவர்கள். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரின் கைகளில் அதிகாரங்கள் சென்றுவிட்டால் ஒட்டு மொத்த சீனியர்களின் நிலைமை அதலபாதாளத்துக்கு போய்விடும் என்றும், சர்வாதிகாரம் கோலோச்சும் என்பதால் அதற்கு தடை போட கட்சியின் சீனியர்ஸ் முடிவெடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

செல்லூர் ராஜூவின் ஆடியோ என்பது தொடக்கம் தான் என்றும் இனி வரும் காலங்களில் மேலும் பல அதிரடிகள் நடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்வர் ராஜா விவகாரத்தை பாருங்கள், அதுவே சிறந்த உதாரணம் என்பதையும் கட்சி சீனியர்கள் தமக்கு அடுத்த நிலையில் பிரமுகர்களிடம் உதாரணம் காட்டி பேசுவதாகவும், இனியும் அமைதி காப்பது சரியாகுமா? என்று கேள்வி எழுப்பி வருவதாகவும் தெரிகிறது.

ஒட்டுமொத்தத்தில் கட்சியின் சீனியர்கள் மத்தியில் ஒரு விதமான அச்சமும், பதற்றமும் நிலவுவதாகவும் அதிமுக முகாமில் நடக்கும் விஷயங்களை சசிகலாவின் கவனத்துக்கு கட்சி சீனியர்கள் கொண்டு போய் சேர்த்துவிட்டதாகவும் ஒரு தகவல் றெக்கை கட்டிக் கொண்டு பறக்கிறது. எது எப்படி என்றாலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் எளிதாக இருக்காது என்பதே தற்போதைய நிலைமை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்…!!

click me!