மேகதாது அணை விவகாரம்: இந்த ஆதாரம் போதுமா..? பக்கம் பக்கமா பட்டியலிட்டு திமுகவை பதறவிட்ட அதிமுக

By karthikeyan VFirst Published Sep 23, 2020, 1:27 AM IST
Highlights

மேகதாதுவில் அணை கட்ட முயலும் கர்நாடக அரசின் செயல்பாட்டை தடுத்து நிறுத்த அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விமர்சித்த திமுகவிற்கு, அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு பதிலடி கொடுத்துள்ளது.
 

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து திமுக எம்பிக்கள் மனு அளித்தனர். அதன்பின்னர் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா, கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் நிலையில், அதைத்தடுக்க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விமர்சித்தார்.

அதிமுக அரசின் மீதான திமுகவின் விமர்சனத்துக்கு, மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக, அதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு பதிலடி கொடுத்துள்ளது.

மேகதாது அணை குறித்த முன்னோட்டம்:

பெங்களூருவிலிருந்து 100 கிமீ தொலைவில் கர்நாடகாவின் ராமநகரா மாவட்டத்தில், காவிரி மற்றும் அர்காவதி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ள ஆழ்ந்த பள்ளத்தாக்கு தான் மேகதாது. பெங்களூரு மாநகர் மற்றும் ராமநகரா மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவும், மின்சார தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மின்னுற்பத்தி செய்யும் நோக்கிலும் மேகதாதுவில் ரூ.5,912 பட்ஜெட்டில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு தேவையான தண்ணீரை திறந்துவிட்டதற்கு பிறகு 66 டிஎம்சி கொள்ளளவை கொண்ட அணை என கர்நாடக அரசு தெரிவித்தது.

ஆகஸ்ட் 2013: கர்நாடக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா, மேகதாதுவில் அணை கட்டும் அறிவிப்பை வெளியிட்டார்.

செப்டம்பர் 2013: கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்தை அறிவித்த உடனேயே, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, மேகதாது அணை கட்ட அனுமதி கொடுக்கக்கூடாது எனக்கோரி கடிதம் எழுதினார். மேலும், மேகதாது அணை மற்றும் சிவனசமுத்ரா திட்டங்களுக்கு தடைகோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஏப்ரல் 2015: மக்களவைக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், மத்திய நீர்வள மற்றும் கங்கை புத்துணர்ச்சித்துறையின் இணையமைச்சர் சன்வார் லால் ஜத், சிவனசமுத்ரா நதி மின் திட்டத்தின், திட்ட விளக்க அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் பெற்றுள்ளதாக 2014 பிப்ரவரியில் தெரிவித்தார். 

ஜூன் 2016: கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட முயல்வது, காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பை மீறும் விதமாக அமைந்துள்ளது. எனவே கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். அதற்கு மறுநாளே, கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், அந்த திட்டத்தின் மீதான கர்நாடகாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அக்டோபர் 2017: கர்நாடக அரசு, அந்த திட்டத்தின் செயலாக்க அறிக்கையை மத்திய நீர் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. அந்த செயலாக்க அறிக்கையில், குறைபாடுகள் இருந்ததால், அது உடனடியாக திருப்பியனுப்பப்பட்டது.

பிப்ரவரி 2018: மேகதாது அணை கட்டுவதால், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழக அரசின் ஒப்புதலை பெறாமல், கர்நாடக அரசு எந்த புதிய அணைகளையும் கட்டக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஜூலை 2018: 2018ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி, கர்நாடக முதல்வர் ஹெ.டி.குமாரசாமி, கர்நாடக சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடரில், தேவையான அனுமதிகளை பெற்று, மேகதாதுவில் அணை கட்ட மீண்டும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

செப்டம்பர் 2018: 2018 செப்டம்பர் 10ம் தேதி கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழ்நாட்டுடனான சிக்கலை ஒரு ஆலோசனைக்கூட்டத்தை கூட்டி தீர்த்துவைக்குமாறு கோரிக்கை விடுத்தது.

செப்டம்பர் 2018: தமிழக அரசின் அனுமதி பெறாமல் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய நீர் ஆணையத்தின் ஒருதலைபட்சமான செயல்பாட்டிற்கு கண்டனமும் தெரிவித்தார். மேலும், மேகதாது அணை விவகாரத்தில், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய முதல்வர் பழனிசாமி, தமிழக அரசின் இசைவை பெறாமல் இந்த விவகாரத்தில் மத்திய நீர் ஆணையத்தை அணுகிய கர்நாடக அரசின் செயல், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறும் செயலாகும் என குற்றம்சாட்டினார்.

நவம்பர் 2018: கர்நாடக அரசு சமர்ப்பித்திருந்த, முன் செயலாக்க அறிக்கைக்கு அனுமதியளித்ததுடன், மேகதாது அணை குறித்த விரிவான செயலாக்க அறிக்கையை தயார் செய்ய அனுமதியளித்தது. 

நவம்பர் 2018: இதையடுத்து 2018 நவம்பர் 25ம் தேதி பிரதமர் மோடிக்கு மீண்டும் கடிதம் எழுதினார் எடப்பாடி பழனிசாமி. அந்த கடிதத்தில், மத்திய நீர் ஆணையத்தின் செயல்பாடு, தமிழக மக்களை அச்சுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. காவிரி நீரை நம்பியுள்ள லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டம், மேகதாது அணை திட்டம் என்பதை சுட்டிக்காட்டியதுடன், மத்திய நீர் ஆணையம் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய கர்நாடக அரசுக்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற உத்தவிரவிடுமாறு, மத்திய நீர்வளத்துறைக்கு அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினார் முதல்வர் பழனிசாமி.

டிசம்பர் 2018: இந்த விவகாரத்தில் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு(அதிமுக அரசு), மத்திய நீர் ஆணையம் கர்நாடகாவிற்கு அளித்த அனுமதியை திரும்பப்பெற உத்தரவிடுமாறும், கர்நாடக அரசு, மேகதாது அணை கட்ட, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணியை நிறுத்த உத்தரவிடுமாறும் கோரியது. மேலும், தமிழக அரசின் இசைவுபெறாமல், எந்த அணை கட்டும் திட்டத்தையும் கர்நாடக அரசு செயல்படுத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவை மீறியதற்காக, மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மற்றும் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. 

டிசம்பர் 2018: தமிழக அரசு தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்குமாறு, மத்திய மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் மசூத் ஹூசனையே, காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவராகவும் நியமித்ததற்கு தமிழக அரசு தெரிவித்த எதிர்ப்பு குறித்தும் விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

ஜனவரி 2019: மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பித்த கர்நாடக அரசு, சுற்றுச்சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய மானியமும் கோரியது.

ஜூலை 2019: கர்நாடக அரசின் மேகதாது அணை மற்றும் மின்னுற்பத்தி திட்டங்களுக்கான முன்மொழிதலை, தமிழ்நாடு - கர்நாடகா இணக்கமான முடிவிற்கு வராமல் ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறி ஒத்திவைத்தது நிபுணர் மதிப்பீட்டுக்குழு.

அக்டோபர் 2019: தமிழக அரசுடன் ஆலோசனை நடத்த கர்நாடகா மறுத்துவிட்டதையடுத்து, இனிமேல் கர்நாடக அரசின் எந்தவிதமான நீர் மின்னுற்பத்தி திட்டங்களுக்கும் நிபுணர் மதிப்பீட்டுக்குழு அனுமதியளிக்கக்கூடாது என்று வலியுறுத்துமாறு, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கிற்கும் அவரவர் துறைகளுக்கு உத்தரவிடுமாறு, முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதினார்.

ஜூன் 2020: ஜூன் 9ம் தேதி நடந்த காவிரி மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டத்திலேயே, கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசு தங்களது எதிர்ப்பை மீண்டும் வலுவாக பதிவு செய்தது. 

ஜூலை 2020: ஜூலை 14ம் தேதி மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து, மேகதாது அணை திட்டத்திற்கான அனுமதியை விரைந்து வழங்குமாறு கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி கோரிக்கை விடுத்தார்.

செப்டம்பர் 2020: கர்நாடக அரசு மேகதாது அணையை கட்ட தமிழக அரசு ஒருபோதும் கண்டிப்பாக அனுமதிக்காது என்று செப்டம்பர் 15ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றத்தில் உறுதியளித்தார்.

செப்டம்பர் 2020: கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை கட்ட விரைவில் அனுமதியளிக்குமாறு மத்திய அரசுக்கு செப்டம்பர் 18ம் தேதி கோரிக்கை விடுத்தார்.

இவைதான், கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட எடுத்த முயற்சியும், அதை அதிமுக அரசு தடுக்க எடுத்த நடவடிக்கைகளும். தாங்கள் செய்ததை சுட்டிக்காட்டியதுடன் மட்டுமல்லாது, திமுக ஆட்சியில் இருந்தபோது கடந்த காலங்களில் செய்ய தவறிய காரியங்களையும் சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்துள்ளது அதிமுக.

மேகதாது அணை கட்டுவதை தடுக்க அதிமுக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று திமுக குற்றம்சாட்டுவது முற்றிலும் முரணாகவுள்ளது. டெல்டா விவசாயிகளுக்காக எந்த நன்மையுமே செய்திராத திமுக, தீங்குகளை மட்டும் நிறைய செய்துள்ளது.

1970ல் முதல்முறையாக ஆட்சிக்கட்டிலில் திமுக அமர்ந்தபோது, ஹேமாவதி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதில், தமிழக அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்தார். காவிரியின் கிளை நதிகளான கபினி, ஹாரங்கி, சொர்ணாவதியில் அணைகளை கட்ட, கர்நாடக அரசு, மத்திய நீர் ஆணைய மற்றும் மத்திய திட்ட ஆணையத்தில் அனுமதி பெறும்போது கருணாநிதி அமைதி காத்தாரே தவிர, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் அரசியல் அழுத்தங்களுக்கு கட்டுப்பட்டு, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சட்டமன்றத்தில் தெரியப்படுத்தாமலேயே திரும்பப்பெற்றார்.

கருணாநிதியின் இதுபோன்ற பாசாங்குத்தனமான செயல்பாடுகள் தான், உச்சநீதிமன்ற உத்தரவுகள், மத்திய நீர் ஆணையத்தின் விதிமுறைகள் ஆகியவற்றையெல்லாம் மதிக்காமல் கர்நாடக அரசு அத்துமீறி செயல்படுவதற்கான துணிச்சலை கொடுத்தது. அதன் விளைவாகத்தான் இயற்கையின் பரிசான ஆறுகளின் குறுக்கே அணைகளை கட்டி நீரோட்டத்தை தடுப்பதற்கான வாய்ப்புகளையும் துணிச்சலையும் கர்நாடக அரசு பெற்றது. ஆனால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரபை பின்பற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு, கர்நாடகாவின் அணை கட்டும் திட்டங்களுக்கு எதிராக, சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அனைத்து உறுதியான மற்றும் திடமான நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது என்று அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.

click me!