
முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அமைச்ச்ர ஆர்.பி. உதயகுமார் தலைமையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பால்குடம் வழிபாடு நடத்தினர்.
உடல்நலக் குறைவால் கடந்த மாதம், சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டி அதிமுக தொண்டர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
அதிமுகவினர், தமிழகம் முழுதும் உள்ள கோயில்களில் சிறப்பு யாகங்களையும் பூஜைகளையும் நடத்தி வருகின்றனர். கடந்த இரு நாட்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி, அதிமுக செய்தி தொடர்பாளர் சரஸ்வதி ஆகியோர் சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள கோயில் ஒன்றில் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயிலில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் அங்கபிரதட்சணம் செய்தும், முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய வேண்டிக் கொண்டனர். இதேபோல் தமிழகம் முழுதும் அதிமுக தொண்டர்களால் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் முதலமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பால்குட வழிபாட்டில் ஈடுபட்டனர்