அப்பா.. ஒரு வழியா முடிந்தது பேச்சு வார்த்தை !! அதிமுக – பாமக கூட்டணி உறுதி… பாமகவுக்கு எத்தனை தொகுதி தெரியுமா ?

By Selvanayagam PFirst Published Feb 13, 2019, 1:41 PM IST
Highlights

அதிமுக – பாமக இடையே நடைபெற்ற கூட்டணி பேச்சு வார்த்தை சுமுகமாக முடிவடைந்தததையடுத்து பாமகவுக்கு புதுச்சேரி உட்பட 6 தொகுதிளும், மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒன்றும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

திராவிட கட்சிகளுடன் இனி ஒரு போதும் கூட்டணி வைத்துக் கொள்ளப்போவதில்லை என பாமக அறிவித்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு அனைத்திலும் பாமக தோல்வி அடைந்தது. இதையடுத்து  வழக்கம் போல் தங்களது முடிவை மாற்றிக் கொண்டனர் ராமதாசும், அன்புமணி ராமதாசும்.

சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு நிலைப்பாடும் மக்களவைத் தேர்தலுக்கு வேறு நிலைப்பாடும் எடுப்போம் என்று கூறி கூட்டணி அமைப்போம் என்பதை மறைமுகமாகத் தெரிவித்திருந்தார் அன்புமணி.

அதற்கேற்றார்போல கடந்த டிசம்பர் மாதம் கோவையில் நடந்த பாமக பொதுக்குழுவில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மருத்துவர் ராமதாஸுக்கு வழங்குவதாகத் தீர்மானம் இயற்றினார்கள். இதன்மூலம் பாமக கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது உறுதியானது.

இந்நிலையில்தான் பாமக, திமுகவுடன் கூட்டணி அமைக்குமா அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்குமா என்னும் விவாதம் கடந்த இரண்டு மாதங்களாகவே நீடித்து வந்தது. அதன்படியே திமுக, அதிமுக என இரு கட்சிகளுடனும் பாமக தரப்பிலிருந்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 

 திமுக கூட்டணிக்குள் பாமகவைக் கொண்டுவர துரைமுருகன், ஜெகத் ரட்சகன் , சபரீசன் என பலரும் முயற்சி எடுத்து வந்தனர்.
அதே நேரத்தில்  அதிமுகவில் கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டவுடன், அதிகாரபூர்வப் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டது. மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு  நெருக்கமான ஆத்தூர் இளங்கோவனும் ராமதாஸைச் சந்தித்து கூட்டணி தொடர்பாக சில விஷயங்களைத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, தைலாபுரம் தோட்டத்துக்குச் சென்று ராமதாஸை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். 


இந்த நிலையில் தற்போது பாமக ‘கேட்ட அனைத்துத் தேவைகளுக்கும்’ அதிமுக தரப்பு பச்சைக் கொடி காட்டிவிட்டதால், கிட்டத்தட்ட கூட்டணி டீல் உறுதி செய்யப்படுவிட்டதாக கூறப்படுகிறது 
.
அதன்படி புதுச்சேரியையும் சேர்த்து ஆறு மக்களவைத் தொகுதிகள் மற்றும்  ஜூனில் காலியாகவுள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில் ஒன்று என அந்த டீலில் ஒப்பந்தமாகியிருக்கிறதாம்..ஒரு வழியாக பாமக மீதான சர்ச்சை இனிமேல் ஓயும் என தெரிகிறது.

click me!