வருகிறது பிப்ரவரி 24..! தாறுமாறான கொண்டாட்டத்திற்கு தயாராகும் அதிமுக தலைமை..!

By Manikandan S R SFirst Published Feb 18, 2020, 1:32 PM IST
Highlights

சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அம்மாவின் திருவுருவச் சிலைக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.

தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமாக இருந்தவருமான செல்வி ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவரது பிறந்தநாள் பிப்ரவரி 24ம் தேதி ஆகும். ஒவ்வொரு வருடமும் அந்தநாளை அதிமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்தவருடமும் அதை சிறப்பாக கொண்டாட அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அம்மாவின் 72-வது பிறந்த நாளான வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை, தலைமைக் கழக வளாகத்தில் அமைந்துள்ள அம்மாவின் திருவுருவச் சிலைக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. கொடியினை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி “நமது புரட்சித்தலைவி அம்மா நாளிதழ்’’ சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள “புரட்சித் தலைவி அம்மாவின் 72-வது பிறந்த நாள் விழா சிறப்பு மலரை’’ ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வெளியிட உள்ளனர்.

நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித்தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நம் எல்லோரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் அம்மா தமது பிறந்த நாளையொட்டி, “ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, கழக உடன்பிறப்புகள் அவரவர் சக்திக்கேற்ப ஏழை-எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்தால், அந்நிகழ்வுகள் பயன்பெறுவோரையும் மகிழ்விக்கும், இம்மண்ணில் தமிழக மக்களுக்காக உழைத்திடும் பெருவாய்ப்பு பெற்ற என்னையும் அது மேலும் உற்சாகப்படுத்தும். எளிமையோடும், எளியோருக்கு உதவிடும் நல்ல நோக்கத்தோடும் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் மூலம் என் அன்புக்குரிய கழக கண்மணிகளால் பயன்பெறும் வறியவர்களின் முகத்தில் படரும் புன்னகை ஒன்றே நம்மையும், நம் ஒப்பில்லா இயக்கத்தையும் ஆராதிக்கின்ற நிகழ்வாக அமையும் என்பதை கழக உடன்பிறப்புகள் உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றும் நமக்கெல்லாம் ஏற்கெனவே அறிவுறுத்தி உள்ளார்.

அதைப் போல், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, கழகத்தில் பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரும் நிர்வாகிகள் அனைவரும் தத்தமது பகுதிகளில், கண் தானம், ரத்ததானம் செய்தல், மருத்துவ முகாம் நடத்துதல், கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துதல்; மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் அவர்களுக்கான கல்வி உபகரணங்களை வழங்குதல், ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்குதல், இலவச திருமணங்களை நடத்தி வைத்தல், ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல், வேட்டி, சேலை வழங்குதல் உள்ளிட்ட மக்கள் மனம் குளிரும் வகையிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறுவன் உயிருக்கு எமனான தாயின் சேலை..! விளையாட்டு விபரீதமாகி போன பரிதாபம்..!

click me!