மாணவர்களை அவமானம் படுத்தாதீர்கள்..! அரசுக்கு கோரிக்கைவிடுத்த ஓபிஎஸ்..

By Thanalakshmi VFirst Published Dec 9, 2021, 3:38 PM IST
Highlights

பள்ளி மாணவர்களின் மாற்று சான்றிதழில் கட்டணம் விவரம் குறிப்பிடும் செயல், அவர்களை அவமானப்படுத்துவது போன்றதாகவும் எனவும் நீதிமன்றம் அறிவித்த இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதனாகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரியது” என்பதற்கேற்ப ஒவ்வொருவரும் தன் வாழ்வில் கல்வி அறிவு பெற்று சிறந்து விளங்க வேண்டுமென்பதற்காக கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் வறுமை காரணமாகத் தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் செலுத்தாமல், அரசுப் பள்ளிகளுக்கு மாறும் மாணவ, மாணவியரின் மாற்றுச் சான்றிதழில் "கல்விக் கட்டணம் செலுத்தவில்லை" என்று குறிப்பிடும் சூழ்நிலை ஏற்பட்டு இருப்பது மிகப் பெரிய இழுக்காகக் கருதப்படுவதோடு மட்டுமல்லாமல் கல்வி உரிமைச் சட்டத்திற்கு எதிரானதாகவும் கருதப்படுகிறது. 

கொரோனா தொற்று காரணமாக வருமானம் பாதிக்கப்பட்ட நிலையில், தனியார் பள்ளிகளில் பயிலும் தங்களது குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டவுடன், அவர்களை அரசுப் பள்ளிகளுக்கு பெற்றோர்கள் மாற்றினர். இதன் காரணமாக, லட்சக்கணக்கான குழந்தைகள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறிவிட்டனர். இவ்வாறு மாறிய குழந்தைகள் கல்வி உரிமைச் சட்டத்தின்படி மாற்றுச் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று அரசும் அறிவித்தது. இதனை எதிர்த்து சென்னையில் உள்ள அகில இந்திய தனியார் பள்ளிகளுக்கான சட்டப் பாதுகாப்பு அமைப்பு, ஒரு பள்ளியிலிருந்து வேறு ஒரு பள்ளிக்கு மாறும்போது கடைசியாகப் படித்த பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்ற தேவையை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாணவ, மாணவியர் செலுத்த வேண்டிய கட்டண பாக்கியை மாற்றுச் சான்றிதழில் குறிப்பிட வேண்டுமென்ற தனியார் பள்ளிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்தப் பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. மேலும், கல்விக் கட்டணம் வசூலிக்கப்படாதது குறித்து தனியார் பள்ளிகளிடம் ஏற்கெனவே பதிவேடுகள் இருக்கின்ற சூழ்நிலையில், மாற்றுச் சான்றிதழிலும் அதுகுறித்துக் குறிப்பிடப்பட வேண்டும் என்று கூறியிருப்பது படிக்கின்ற மாணவ, மாணவியர் மத்தியில் ஒரு இழுக்கை, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துவதோடு, அவர்களை அவமானப்படுத்துவது போலும் இருக்கிறது. மேலும் மற்ற மாணவ, மாணவியர் மத்தியிலும் அவமதிப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தும். 

இதற்குத் தீர்வு காண வேண்டிய கடமை தமிழக அரசுக்கு நிச்சயம் உண்டு. கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் அனைத்துப் பள்ளிகளும் நேரடி வகுப்புகளை நடத்தாதன் காரணமாகப் பள்ளிகளின் செலவு வெகுவாகக் குறைந்துவிட்ட நிலையில், பெரும்பாலான பள்ளிகள் கல்விக் கட்டணத்தைக் குறைக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொண்டு, ஏழை எளிய மாணவ மாணவியர் நலன் கருதி இதுகுறித்து மேல்முறையீடு செய்து குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இழுக்கை நீக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

எனவே, முதல்வர் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, மாற்றுச் சான்றிதழில் மாணவ, மாணவியரின் கட்டண பாக்கி குறிப்பிடப்பட வேண்டும் என்ற ஆணையை எதிர்த்து மேல்முறையீடு செய்து, அவர்கள் மீது சுமத்தப்பட்ட இழுக்கை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார்.

click me!