நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி கை விட்டு போன நிலையில், நமது அம்மா என்ற பெயரில் நாளிதழும், அதிமுகவுக்கு என தனி சேனலும் தொடங்க அதிமுக முடிவு செய்துள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் உயிரிழப்புக்குப் பிறகு, அதிமுக இரண்டாக பிளவு பெற்றது.
அதிமுகவில் பல்வேறு அரசியல் நிலை எழுந்தது. அப்போது ஆட்சி ஒபிஎஸ்சுக்கும் இல்லாமல் சசிகலாவுக்கு இல்லாமல் எடப்பாடி கைக்கு போனது.
சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். ஒபிஎஸ் தர்மயுத்தம் என்ற பெயரில் தனி அணியாக செயல்பட்டு வந்தார். இதனால் இரட்டை இலையும் முடங்கி போனது.
டிடிவி தினகரன் எடப்பாடி பக்கம் இருந்தும் கட்சியை ஒழுங்குபடுத்த முடியாததால் முதலமைச்சர் எடப்பாடி ஒபிஎஸ் பக்கம் சாய்வது என முடிவு செய்தார்.
இதைதொடர்ந்து ஒபிஎஸ் வைத்த கோரிக்கையை நிறைவேற்றுவது என இபிஎஸ் முடிவெடுத்து அணிகளை ஒன்றிணைத்தார். அப்போது ஒபிஎஸ் வைத்த கோரிக்கையான சசிகலாவை நீக்கம் செய்வது, ஜெ மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைப்பது என இரண்டு கோரிக்கைகளையும் நிறைவேற்றி உத்தரவிட்டார்.
அப்போது சசிகலா குடும்பத்தாரிடம் இருக்கும் ஜெயா டிவியையும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழையும் கைப்பற்றுவோம் எனவும் எடப்பாடி தெரிவித்திருந்தார். ஜெயலலிதா காலத்தில் கட்சிக்கென இருந்த ஜெயா டி.வி மற்றும் நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் தற்போது தினகரனின் வசம் உள்ளது.
இந்த நிலையில் அதிமுகவுக்கு என தனி சேனலும், நாளிதழும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே இருந்து வந்தது. அந்த வகையில் தற்போது நமது அம்மா என்ற பெயரில் நாளிதழ் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா இருந்தபோது, நமது எம்.ஜி.ஆர். என்ற பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டிவி விட்டு சென்ற நிலையில், தற்போது, நமது அம்மா என்ற பெயரில் நாளிதழும், அதிமுகவுக்கு என தனி சேனலும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.