பொங்கல் பரிசில் ஊழல்... அரசு மீது கே.பி.முனுசாமி பகீர் குற்றச்சாட்டு!!

By Narendran SFirst Published Jan 20, 2022, 3:47 PM IST
Highlights

அதிமுகவை அழிக்க லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விட்டு முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்துவதாக திமுக அரசு மீது அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

அதிமுகவை அழிக்க லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விட்டு முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை நடத்துவதாக திமுக அரசு மீது அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சரும் தர்மபுரி மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். கே.பி.அன்பழகன் பாரம்பரியமாக தொழில் செய்யும் குடும்பம் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அரசு தோல்வி அடைந்துள்ளது.

அந்த தோல்வியை மக்களிடம் இருந்து மாற்ற திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே, திமுகவின் இறுதி எதிரியான அதிமுகவை அழிக்கும் நோக்கில் லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு இந்த அரசு சோதனை நடத்துகிறது. ஒருபோதும் அதிமுகவை அச்சுறுத்தவே அழிக்கவோ முடியாது. திமுக அரசு பொறுப்பேற்று 9 மாதங்களில் எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களும் செய்யவில்லை. அவர்கள் செய்த ஒரே திட்டம் பொங்கல் தொகுப்பு வழங்கியது மட்டுமே. அதிலும் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. 2.15 கோடி குடும்ப அட்டைக்கு ஆயிரத்து 159 கோடி ரூபாய்க்கு பொங்கல் தொகுப்புகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இவற்றில் ஒரு குடும்ப அட்டைக்கு 570 ரூபாய் ஆகிறது. ஆனால் அரசு வழங்கிய தொகுப்பின் சில்லறை விலையுடன் ஒப்பிடும் போது 300 ரூபாய் முதல் 350 ரூபாய் ஆகிறது. அதன்படி ஒரு குடும்ப அட்டைக்கு 270 ரூபாய் மிக பெரிய ஊழல் முறைகேடு நடந்துள்ளது. பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக புகார்கள் வந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். அந்த அறிவிப்பு அறிவிப்பாக மட்டுமே உள்ளது. இந்த முறைகேடு ஊழல் தொடர்பாக தமிழக அரசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் உரிய பதில் அளிக்க வேண்டும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

click me!