ஏற்கனவே 2 முறை அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டபோது எங்கே போனார் ஸ்டாலின். எகிறி அடிக்கும் ஜெயக்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Jan 20, 2022, 3:34 PM IST
Highlights

எம்ஜிஆர் இல்லை என்றால் கருணாநிதியே இருந்திருக்க மாட்டார், கருணாநிதியை முதலமைச்சராக முன்மொழிந்ததே எம்ஜிஆர்தான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், 2004, 2009 ஆம் ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழக அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டன ஏன் அப்போது ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

ஏற்கனவே திமுக ஆட்சியில் இரண்டு முறை குடியரசு தினவிழாவில் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளது, அப்போதெல்லாம் வாய் திறக்காத ஸ்டாலின் இப்போது  பேசுவதற்கு காரணம் என்ன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். நிராகரிக்கப்பட்டதற்கு முதலில் மேற்குவங்க முதல்வர் எதிர்ப்பு தெரிவித்த பின்னரே ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார் என்றும் அவர் விமர்சித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைத்தது முதல், பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. பணமதிப்பிழப்பு விவகாரம் தொடங்கி நீட்தேர்வு, வேளாண் சட்டம் என தொடர்ந்து தமிழக அரசு மத்திய அரசை எதிர்த்து வருகிறது. எதிர்க்கட்சியாக இருந்துபோதே காட்டிய அதே எதிர்ப்பை ஆட்சிக்கு வந்த பிறகும் வலுவாக காட்டிவருகிறது. 

அதாவது பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும்  மத்திய அரசு உரிய நிவாரணங்களையும், திட்டங்களையும் வழங்கி வருகிறது என்றும்,  பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களை ஓரவஞ்சனையுடன் நடத்துகிறது என்றும் மத்திய அரசுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறது. இந்நிலையில்தான் எதிர்வரும் குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கான வாகனங்களை அனுமதிப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினவிழாவில் மாநிலங்களின் சிறப்பை பறைசாற்றும் விதமாக அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் அணிவகுத்துச் செல்வது வழக்கம். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் குழு அமைக்கப்பட்டு வாகனங்கள் தேர்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவுக்கு தமிழக அரசின் அலங்கார வாகனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மேற்குவங்கம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மாநில வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தமிழகம் கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கொந்தளிப்பு அடைந்துள்ளன. திட்டமிட்டே பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் வாகனங்கள் புறக்கணிக்கப்படுகிறது என்ற விமர்சனம் எழுந்துள்ளது. தமிழக அரசின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் உருவங்கள் அடங்கிய அலங்கார ஊர்திகள் இடம்பெற இருந்த நிலையில் அது புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதை புறக்கணித்ததற்காக அதிகாரிகள் தெரிவித்துள்ள காரணம் தமிழக சுதந்திர போராட்ட தியாகிகளை கொச்சைபடுத்தும் வகையில் இருக்கிறது என பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதி உள்ளார். தமிழக முதலமைச்சரும் அதேபோன்ற கடிதத்தை எழுதியுள்ளார்.

குடியரசு தினத்தன்று மத்திய அரசால் புறக்கணிக்கப்பட்ட தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் வாகனங்கள் மாநில அரசின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் இடம்பெற செய்யப்படும் என்றும், அந்த வாகனங்கள் தமிழகம் முழுவதுமாக கொண்டுசெல்லப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தை அவமானப் படுத்த முயன்ற மத்திய அரசுக்கு சரியான பதிலடி என்றும் பலரும் இதை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, தமிழகத்தின் வாகனத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை, எல்லா குடியரசு, சுதந்திர தினங்களிலும் எல்லாம் மாநில வாகனங்களும் அனுமதிப்பது கிடையாது. இதேபோல் ஏற்கனவே பல மாநிலங்களில் வாகனங்களும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த முறை புறக்கணிக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து கேட்டு முறையாக பதில் அளிக்கப்படும் என கூறினார். 

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சியில் ஏற்கனவே குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சியில் தமிழக வாகன ஊர்திகள் நிராகரிக்கப்பட்டுள்ளன அப்போதெல்லாம் ஒன்றும் பேசாத ஸ்டாலின் இப்போது பேசுவதற்கான காரணம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் அதிமுகவினரின் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஜெயக்குமார், அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொங்கல் பரிசு கலப்படத்தால் திமுக அரசு மீதான மக்கள் வெறுப்பை திசை திருப்பவே முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெறுகிறது என்றார். இதற்கெல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது என்ற அவர், எம்ஜிஆரை பெரியப்பா என்று அழைக்கும் ஸ்டாலின் ஏன் அவரின் பிறந்த நாளுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

எம்ஜிஆர் இல்லை என்றால் கருணாநிதியே இருந்திருக்க மாட்டார், கருணாநிதியை முதலமைச்சராக முன்மொழிந்ததே எம்ஜிஆர்தான் என்றார். தொடர்ந்து பேசிய அவர், 2004, 2009 ஆம் ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் திமுக ஆட்சியில் இருந்தபோது தமிழக அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டன ஏன் அப்போது ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி கலந்துகொள்ளாத நிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை தான் காரணம். சரியான முறையில் வடிவமைக்காத காரணத்தால் அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழக அரசின் தகுதி இன்மையை காட்டுகிறது. நிராகரிக்கப்பட்டதற்கு முதலில் மேற்குவங்க முதலமைச்சர்தான் எதிர்ப்பு தெரிவித்தாது மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார், அதன் பிறகுதான் தமிழக முதலமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலினையும் தமிழக அரசையும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 
 

click me!