மாநில மானத்தை கப்பலேற்றும் மாண்புமிகுக்கள்! வாராவாரம் ஊழல் ஆரவாரம்...

First Published May 11, 2017, 6:25 PM IST
Highlights
ministers


தமிழக அமைச்சரவையில் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகாத அமைச்சர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் போல! இது விஜயபாஸ்கர் வாரம், இது காமராஜ் வாரம், இது சரோஜா வாரம்...என்று வாரம் ஒரு மாண்புமிகுவின் பெயர் பண விவகாரத்தில் சிக்கி தேசிய அளவில் மீடியாவில் மிதிபடுகிறது.

அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் மற்றும் தற்காலிக பொதுச்செயலாளர் இருவரும் கம்பிகளுக்குள்ளே. ஆக தலைமையில்லாமல் அ.தி.மு.க. தள்ளாடி தடுமாறிக் கொண்டிருக்கிறது. வெகுஜன செல்வாக்கில்லாத முதல்வரால் ஆட்சியும் ஈர்ப்பான அந்தஸ்தை பெறமுடியவில்லை. கடிவாளமற்ற குதிரையாக அமைச்சர்களும், அதிகாரிகளும் பணத்தை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு விமர்சனம் இருக்கிறது. இதை மெய்யாக்குவிதமாகதான் சூழல்களும் போய்க் கொண்டிருக்கின்றன. 

ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்கான பணத்தை தன் கஸ்டடியில் வைத்து கையாண்டார் என்கிற புகாரில் சிக்கிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கள் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கினார். இப்போது வரை விசாரணையில் ஆஜராகிக் கொண்டிருக்கிறார். ரெய்டின் போது இவரது இல்லத்தில் நடந்த சர்ச்சைகளும், இவருக்கு ஆதரவாக இவரது வீட்டுக்கே போய் நின்று அமைச்சர்கள் ஆத்திரப்பட்டதும் தேசிய அளவில் விமர்சனக்த்துக்கு உள்ளாகின. 

இந்த பரபரப்பு அடங்கும் முன் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது திருவாரூ மாவட்ட நீடாமங்கலத்தை சேர்ந்த எஸ்.வி.எஸ்.குமார் என்பவர் பண மோசடி வழக்கை ஒன்றை நீட்டியிருக்கிறார். மயிலாப்பூரில் தான் வாங்கிய வீட்டில் உட்கார்ந்து கொண்டு நகர மறுக்கும் மறுக்கும் நபரை வீட்டை காலி செய்ய வைத்து தருவதற்காக காமராஜ்_க்கு முப்பது லட்ச ரூபாய் கொடுத்ததாகவும், அந்த பணத்தை வாங்கிய பின்னும் காமராஜ் எந்த உதவியும் செய்யவுமில்லை, பணத்தை திருப்பி தரவுமில்லை என்பதே புகார். குமாரின் புகாருக்கு தமிழக காவல்துறையிடம் நியாயம் கிடைக்காததால் அவர் சுப்ரீம் கோர்ட்டு வரை போய் நின்றார். சுப்ரீம் கோர்ட்டோ  இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு குட்டு வைத்து கேள்விகள் கேட்டது. 

காமராஜ் விவகாரம் கடந்த வாரம் பரபரப்பை கிளப்பிய நிலையில் இந்த வார சர்ச்சையை போணி செய்திருப்பவர் சமூகநலத்துறை அமைச்சரான சரோஜா. தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பெண் அதிகாரியான மீனாட்சிதான் சரோஜா மீது புகார் வாசித்திருக்கிறார். தன்னை பணி நிரந்தரம் செய்ய முப்பது லட்ச ரூபாய் கேட்டதாக குற்றச்சாட்டை கிளப்பியிருக்கிறார்.

சென்னையிலுள்ள அமைச்சர் வீட்டில் அவரை சந்தித்தபோது முப்பது லட்சம் ரூபாயை அமைச்சர் கேட்டதாகவும், மறுத்தபோது தனது தனிப்பட்ட வாழ்க்கையை அமைச்சர் கேவலமாக விமர்சித்ததாகவும், வேலையை விட்டு விலகாவிட்டால் நடத்தை சரியில்லை என்று அசிங்கப்படுத்திவிடுவேன் என்று சரோஜா மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் சிறையிலிருக்கும் சேகர் ரெட்டியின் மணல் விவகாரத்தில் கோடி கோடியாக கட்டிங் வாங்கியதாக ஒன்பது அமைச்சர்களின் பெயர் அடிபடுகிறது, கூடவே இந்த ஆட்சியில் முன்பு அமைச்சராக இருந்துவிட்டு இப்போது கட்சிக்குள்ளேயே புரட்சி செய்தவரின் பெயரும் அடிபடுகிறது.

வருமானவரித்துறை இந்த புகார் தொடர்பான ஆதாரங்களை புள்ளிவிபரமா அள்ளிவெச்சிருக்குது. கூடவே தமிழக தலைமைச்செயலரின் கவனத்துக்கும் இந்த ஊழல் அமைச்சர்களின் பட்டியலை தந்திருக்குது. 
விஜயபாஸ்கர், காமராஜ், சரோஜா ஆகிய மூன்று அமைச்சர்களும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மிக கடுமையா மறுத்திருக்காங்க. உள்நோக்கத்துடன் புனையப்பட்ட கதைன்னு சொல்லியிருக்காங்க.

ஆனாலும் ‘எந்த அடிப்படையுமில்லாமல் வருமான வரித்துறையும், தனி நபர்களும் அமைச்சர்களுக்கு எதிராக களமிறங்க மாட்டாங்க! அமைச்சர்களின் தரப்பு நியாயங்களையும் எடுத்துக்கொண்டு, இந்த வழக்கெல்லாம் தீரவிசாரிக்கப்பட்டு இவர்களை ஆட்சியில் அமர்த்திய மக்களின் முன் உண்மையை விளக்க வேண்டியது சட்டம் மற்றும் காவல்துறையின் கடமை.” என்கிறார்கள். 

தி.மு.க., அ.தி.மு.க., என இரு ஆட்சியிலும் தமிழக ம் இதுவரை சந்தித்திருக்கிற அமைச்சர்களுக்கு எதிரான பல ஊழல் வழக்குகளில் ஒன்றாக இவையும் கடந்து போகுமென்பதுதான் நிதர்சனம்!

சரி, மக்களாவது என்ன ஏதென்று விசாரிப்பார்களா? என்று கேட்டால்...பாகுபலிக்கு இன்னும் டிக்கெட் கிடைக்கவில்லை, ரஜினியோடு போட்டோ எடுப்பதில் பெயர் விட்டுப்போச்சே, தெறிக்கு விழுந்த லைக்ஸைவிட விவேகத்துக்கு அள்ளுதே...என்று ஆயிரமாயிரம் கவலை. இதில் ஊழல் அமைச்சர்களின் சட்டையை பிடிக்கவா அவர்களுக்கு தோணபோகிறது!
தமிழன்டா!

click me!