ஜெயலலிதா இல்லாமலும் எங்க ஆட்சி தொடருது பார்த்தீங்கள்ள..! ஜெ.,வை உரசிப்பார்த்த ஜெயக்குமார்

By Ezhilarasan BabuFirst Published Jan 6, 2020, 6:12 PM IST
Highlights

ஜெயலலிதா மறைவுக்குப் பின் எங்கள் கட்சியை ‘தேறாது’ என்றனர். ஆனால் கட்சி நிலைநிறுத்தப்பட்டது. எங்களின் ஆட்சி தொடர்கிறது. 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அரசு அமையும். இதை உள்ளாட்சி தேர்தலின் மூலம் மக்கள் குறிப்பாக உணர்த்தியுள்ளனர்

*எனக்கு 70 வயதாகிறது! ஆனாலும் எப்படி இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள்? என்று பலரும் கேட்கின்றனர். இந்தளவு சுறுசுறுப்பாக இருக்க சில ஆலோசனைகளை சொல்கிறேன். ஆசை, கவலை, உணவு மற்றும் தூக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். குறைவாக பேசுங்கள். இதுதான் என் சுறுசுறுப்புக்கு காரணம். இதை கடைபிடித்தால் எல்லாமே நிறைவாக இருக்கும். எனர்ஜியும் கிடைக்கும். 
-ரஜினிகாந்த் (நடிகர்)

*பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரை விமர்சனம் செய்தததாக, நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்டவரை, பழிவாங்கும் நோக்கோடு, சிறையில் அடைத்ததை கண்டிக்கிறோம். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், ஒரு கூட்டத்தில் ‘முன்னாள் பிரதமர் ராஜிவை, நாங்கள்தான்  கொன்று புதைத்தோம்’ என்று பேசினார். அவர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பா.ஜ.க.வின் எச்.ராஜா, எஸ்.வி.சேகர், நயினார் நாகேந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
- தமிழக காங்கிரஸ்.

*உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது மக்கள் சிந்தித்துதான் முடிவெடுக்கின்றனர்! என்பது புரிகிறது. யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொண்டு, விருப்பமானவர்களையே தேர்ந்தெடுக்கின்றனர். இந்த தேர்தல் முடிவு, அ.தி.மு.க.வுக்கு ஒரு எச்சரிக்கை மணி, அபாய சங்கு. தேர்தல் முடிவு, என்னையும் சிந்திக்க வைத்துள்ளது. 
-டி.ராஜேந்தர் (நடிகர், அரசியல்வாதி)

*உள்ளாட்சி தேர்தலில் தமிழக அமைச்சர்கள் மாவட்டங்களில் முகாமிட்டும், பணத்தை வாரி இறைத்தும் அ.தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவுதான் ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையான வெற்றியை, தி.மு.க. கூட்டணிக்கு கொடுத்திருக்கும் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி.-மு.க. ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை எதிர்த்து அமைதியான முறையில் போராட்டம் நடத்திய, அறுபது ஆயிரம் பேர் மீது தமிழகத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் அடக்கு முறை நிகழ்வுகள் கண்டனத்திற்கு உரியன. 
-இரா.முத்தரசன் (இ.கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்)

*உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதிமன்றம் சென்று, எப்படி நியாயத்தை நிலை நாட்டி இருக்கிறோமோ அதேபோல ஓட்டு எண்ணிக்கையில் தவறு இழைத்த அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் புகார் தருவோம். தேர்தல் முடிந்தது, வாக்கு எண்ணிக்கையும் முடிந்தது, பிரச்னை முடிந்தது! என்று சம்பந்தப்பட்ட, தவறான அதிகாரிகள் தப்பித்துவிட முடியாது. 
-ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க. அமைப்புச் செயலாளர்)

*உள்ளாட்சி தேர்தல் முடிவுகளைப் பொறுத்தவரையில், தேர்தல் முடிவுகள் எதுவாயினும், மக்கள் தீர்ப்பை அ.தி.மு.க. சார்பில் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். எங்கள் இயக்கத்துக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி.
-ஓ.பன்னீர் செல்வம் (துணை முதல்வர்)

*அ.தி.மு.க. அரசுக்கு எதிராக சிறுபான்மையினர் ஓட்டளித்துள்ளனர். குடியுரிமை சட்டத்தை, அ.தி.மு.க. ஆதரித்ததால்தான் உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏற்பட்டுள்ளது. தேசிய குடியுரிமை பதிவேடு, நாடு முழுவதும் அமலாகும் என்ற அச்சம் சிறுபான்மையினர் மத்தியில் நிலவுகிறது. எனவே அ.தி.மு.க. தன் முடிவை மறுபரிசீலனை செய்யும்! என நம்புகிறேன். 
- அன்வர் ராஜா (மாஜி அ.தி.மு.க. எம்.பி.)

*மத்திய அரசு கொண்டு வந்துள்ள, குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடே தீப்பற்றி எரிகிறது. இந்த நிலையில், என் பிறந்த நாளை கொண்டாட நான் விரும்பவில்லை. என் பிறந்தநாளை யாரும் கொண்டாட வேண்டாம். 
- கனிமொழி (தி.மு.க. எம்.பி.)


*ஜெயலலிதா மறைவுக்குப் பின் எங்கள் கட்சியை ‘தேறாது’ என்றனர். ஆனால் கட்சி நிலைநிறுத்தப்பட்டது. எங்களின் ஆட்சி தொடர்கிறது. 2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அரசு அமையும். இதை உள்ளாட்சி தேர்தலின் மூலம் மக்கள் குறிப்பாக உணர்த்தியுள்ளனர். முன்னால் எம்.பி. அன்வர்ராஜா அ.தி.மு.க.வில் உள்ளார். கட்சியில் இருந்து கொண்டு வெளியில் விமர்சனங்களைக் கூறக்கூடாது. -ஜெயக்குமார் (மீன்வளத்துறை அமைச்சர்)
 

click me!