“அதிமுகவை பற்றி அவதூறு பரப்புவதா” பொன்.ராதாவுக்கு கண்டனம் - திண்டுக்கல் சீனிவாசன் “பரபரப்பு அறிக்கை”

Asianet News Tamil  
Published : Mar 05, 2017, 01:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
“அதிமுகவை பற்றி அவதூறு பரப்புவதா” பொன்.ராதாவுக்கு கண்டனம் - திண்டுக்கல் சீனிவாசன் “பரபரப்பு அறிக்கை”

சுருக்கம்

Dindigul Srinivasan Federal Minister condemned pon

நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். அப்போது, அதிமுக அழிந்துவிட்டது. திமுக அழிகிறது என கூறினார். இவரது கருத்து அதிமுக மற்றும் திமுகவினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அதிமுக பொருளாளரும், அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக அழிந்துவிட்டதாகவும்; அவருடைய கட்சி வளர்ந்து கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். பொன்.ராதாகிருஷ்ணன் தன்னுடைய கட்சி வளர்ந்து கொண்டிருப்பதாகக் கூறியதில் யாருக்கும் வருத்தம் இல்லை. அது அவருடைய பிரச்சனை. ஆனால், தமிழகத்தில் திராவிட இயக்கத்தின் நிலை பற்றி அவர் எந்த கருத்துகளையும் பரப்ப முயற்சிக்கக் கூடாது.

தமிழ்நாடும், அதிமுகவும் தாயும், குழந்தையும் போல உள்ளது. தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் அரசியல் ஆயுதமாக திகழ்வது அதிமுக மட்டுமே. சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, அனைத்து மக்களும் சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து அமைதியாகவும், ஒரு தாய் மக்களாக வாழ உருவாக்கப்பட்ட ஒப்பற்ற இயக்கம் அதிமுக. இந்த இயக்கம் அரசியலில் செய்திருக்கும் சாதனைகள் பல ஆயிரம்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பாரதிதாசன், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற சமூக நீதிக்காக தங்களை அர்ப்பணித்து கொண்ட தன்னலமில்லா தியாகிகள் உருவாக்கிய இந்த திராவிட இயக்கத்தின் பங்களிப்பை தமிழர்கள் ஒவ்வொருவரும் நன்கு அறிந்திருக்கிறார்கள்.

திராவிட இயக்கத்தின், சுமார் ஒரு நூற்றாண்டு பணியில் தமிழகம் பெற்றிருக்கும் ஏற்றம் ஊரும், உலகும் அறிந்த உண்மை. இன்னும் எத்தனை நூற்றாண்டு ஆனாலும் தந்தை பெரியார் ஊன்றிய திராவிட இயக்கம் என்ற உணர்வு ஒருபோதும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இருந்து மாறாது. மறையுவும் மறையாது.

பகுத்தறிவு சிந்தனை, தாய் மொழிப் பற்று, மனிதாபிமான உணர்வு, பெண் கல்வியும் அதன் வழியாக விடுதலையும், எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற லட்சிய பயணம் ஆகியவற்றில் இந்திய நாட்டிற்கே தமிழகம் முன்னோடியாக விளங்க காரணம் எங்கள் திராவிட இயக்க உணர்வு. இது அணையா விளக்கு. ஆயிரம் காலத்து பயிர்.

ஏதோ சில சலசலப்புகளை உருவாக்க இந்த இடைப்பட்ட காலத்தில் சில சூழ்ச்சிக்காரர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதால் அதிமுக அழிந்துவிட்டது என்று பல ஆண்டுகளாய் அரசியலில் இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுவது நியாயமல்ல.

இது போன்ற சலசலப்புகளை நாங்கள் ஏராளமாக பார்த்து, அனைத்தையும் வெற்றி கண்ட வீரர்கள் கூட்டம் எங்கள் இயக்கம். அதிமுக எந்நாளும் வெல்லும். அதிமுக எந்நாளும் மக்கள் இதயங்களில் வாழும். தொடர்ந்து வெற்றி நடை போடும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

CM Vijay Convoy: காரின் கண்ணாடியை இறக்கிய முதல்வர் விஜய்! பாய்ந்து வந்த இளைஞர்! நடந்தது என்ன?
Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!