பூந்தமல்லி, விருத்தாசலத்தில் பாமகவுக்கு எதிர்ப்பு... அதிமுக கொடியுடன் போராட்டத்தில் குதித்த தொண்டர்கள்...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 11, 2021, 10:51 AM IST
Highlights

பூந்தமல்லி, விருத்தாச்சலம் ஆகிய தொகுதிகளை பாமகவிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

அதிமுக கூட்டணியில் முதல் கட்சியாக பாமகவுடன் தொகுதி பங்கீடு நிறைவுற்றது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கியதால் அதிமுக-பாமக இடையேயான கூட்டணி சிக்கலின்றி முடிந்தது. அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டன. இட ஒதுக்கீடு கோரிக்கை ஏற்கப்பட்டதால், கூட்டணியில் முதன் முறையாக குறைந்த எண்ணிக்கையில் போட்டியிட பாமகவும் ஒத்துக்கொண்டதாக அன்புமணி ராமதாஸ்  தெரிவித்திருந்தார். 

தொகுதிகளை குறைவாகப் பெற்றுக்கொண்டதால், கேட்கும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென அதிமுகவிற்கு பாமக கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி கட்சி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து பாமக போட்டியிட விரும்பும் 23 தொகுதிகள் எவை என்பது குறித்த பட்டியலும் ஓபிஎஸ்-இபிஎஸிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாமகவிற்கும், பாஜகவிற்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட உள்ள தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு, நேற்று பட்டியலும் வெளியிடப்பட்டது. 

அந்த பட்டியலின் படி செஞ்சி,மயிலம்,ஜெயங்கொண்டம், திருப்போரூர்,  வந்தவாசி(தனி),  நெய்வேலி, திருப்பத்தூர், ஆற்காடு
கும்மிடிப்பூண்டி , மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாசலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம்மேற்கு, சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்) ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 


இந்நிலையில் பூந்தமல்லி, விருத்தாச்சலம் ஆகிய தொகுதிகளை பாமகவிற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். பூந்தமல்லி தனி தொகுதியை அதிமுகவினருக்கு மட்டுமே ஒதுக்க வேண்டுமென சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அதிமுகவினர் கையில் கட்சி கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதேபோல் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன் ஆதரவாளர்கள் மீண்டும் அவருக்கே வாய்ப்பு வழங்க வேண்டுமெனக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

click me!