
அ.தி.மு.க.வை இன்று இயக்கும் விஷயங்கள் இரண்டுதான் ஒன்று ‘நன்றி மற’ மற்றொன்று ’நேற்று சொன்னதை மற’. அதிலும் இந்த மறதி விஷயத்தில் சசி அணி பி.ஹெச்.டி.யே முடித்து நிற்க, பன்னீர் கோஷ்டியோ பிளஸ் டூ லெவலுக்கு இப்போதுதான் மூச்சு வாங்க ஏறிக் கொண்டிருக்கிறது.
மறதி என்றால் அண்ணாச்சி கடையில் கறிவேப்பிலை வாங்கிவிட்டு மெய்யாலுமே நாம காசு கொடுக்க மறந்ததால்‘ஏலே, செவத்து மூதேவி! காச யாரு உங்க தாத்தாவா கொடுப்பாரு?” என்று திட்டு வாங்குவோமே அந்த ரியல் மறதியில்லை. இது அரசியல் வசதிக்காக, திட்டமிட்டு நடத்தப்படும் மறதி. அதாவது ப்ரீ பிளான்டு செலக்டீவ் அம்னீஷியா!
இந்த இடத்தில் ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். ‘மறதி”க்கும் அ.தி.மு.க.வுக்கும் பூர்வஜென்மத்திலிருந்தே ஏகபோக பந்தம் உண்டு. எம்.ஜி.ஆர்_க்கு பின் கழகத்தில் ஜெ., தலையெடுப்பதை துவக்கத்தில் ஆவேசமாக எதிர்த்த மாஜி சபாநாயகர் காளிமுத்து உள்ளிட்ட கணிசமானோர் தனது பிந்தைய அரசியல் காலத்தில் அதை மறந்து ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தஞ்சமடைந்தனர்.
ராஜீவ்காந்திக்கு போயஸ்கார்டனிலிருந்து எழுதப்பட்ட கடிதங்கள் பிற்காலத்தில் அரசியல் வசதிக்காக மறக்கப்பட்டன, சர்ச்சையாக்கப்பட்டன பின் மீண்டும் மறக்கப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன்பாக அத்வானிக்கு செலக்டீவ் அம்னீஷியா இருப்பதாக தான் விமர்சித்ததை ஜெ., மறந்து மோடி பரிவாரங்களுடன் அரசியல் நட்பை உறுதி செய்தார்.
சசி அண்ட் கோ ஜெயலலிதாவால் தூக்கி வீசப்பட்டதும் பின் மீண்டும் இணைக்கப்பட்டதற்கும் இந்த மறதியே காரணம். இதையெல்லாம் விட தனது தேர்தல் அறிக்கையில் சொல்லும் திட்டங்களை ஆட்சிக்கு வந்ததும் அ.தி.மு.க. மறந்ததெல்லாம் தஞ்சாவூர் கல்வெட்டில் வெட்ட வேண்டிய வரலாற்று பதிவுகள். இப்படி அ.தி.மு.க.வின் வளர்ச்சியில் மறதி ஆற்றிய பங்கை சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில் தற்போதும் அக்கட்சியை திட்டமிட்ட ‘மறதி’யே இயக்கி வருகிறது. ’சின்னம்மா முதல்வராக பதவியேற்க வேண்டும்.’ என்று பன்னீரின் சி.எம். நாற்காலிக்கு அடியில் சில மாதங்களுக்கு முன் வெடி கொளுத்திப்போட்ட அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் அதே வாய்தான் இப்போது ‘பன்னீர்செல்வத்திடமிருந்து விசுவாசத்தை கற்றுக் கொண்டோம்.’ என்று எல்லாவற்றையும் மறந்து பேசியிருக்கிறது.
‘பன்னீரும் அவரோடு நிற்பவர்களும் அம்மா கொடுத்த வாழ்க்கையை மறந்த பச்சை துரோகிகள்’ என்று வர்ணித்த அதே சி.வி.சண்முகத்தின் நாக்குகள் சமீபத்தில் அதை மறந்தன.
இவ்வளவு ஏன்? 2012ல் வைகோவுடன் முரண்பட்டு மோதி, ம.தி.மு.க.விலிருந்து பிரிந்த நாஞ்சில் சம்பத் அப்போது ஆட்சியிலிருந்த ஜெயலலிதாவின் அரசை வாயார புகழ்ந்தார். அரசியலில் அதிருப்தியிலிருந்த நாஞ்சிலை அழைத்து ஜெயலலிதா முன் நிறுத்தியது ஓ.பி.எஸ்.தான். இதை நாஞ்சிலே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.
அ.தி.மு.க.வில் து.கொ.ப.செ. பதவியும், ஒரு இன்னோவாவும் கிடைத்தது. ஆனால் இன்றோ அந்த பழைய நிகழ்வை மறந்து அதே நாஞ்சில் சம்பத்தோ ’ஓ.பி.எஸ்.ஸிடம் போய் நிற்க வேண்டிய சூழல் வந்தால் செத்துடுவேன், தற்கொலை செய்து கொள்வேன்.’ என்கிறார்.
இப்படி அந்த கட்சியின் வி.ஐ.பி. நிர்வாகிகள் மறந்த உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்!...ஆக சூழல் வசதிக்காக திட்டமிட்டு ஏற்றுக் கொள்ளும் இந்த ‘செலக்டீவ் அம்னீஷியா’தான் அ.தி.மு.க.வை இன்று இயக்குகிறது.
கவனமா இருங்க பாஸ் மக்களும் ‘அ.தி.மு.க.’ எனும் கட்சியை செலக்ட் பண்ணி திட்டமிட்டு மறந்துவிட போகிறார்கள்!