
சசிகலா தரப்புக்கும் ஒ.பி.எஸ் தரப்புக்கும் ஏற்பட்ட மோதலால் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு திமுகவினரிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவும் திமுக சார்பில் சிம்லா முத்துசோழனும் போட்டியிட்டனர்.
அதில் ஜெயலலிதா சிம்லா முத்துசோழனை விட வெறும் 38,000 வாக்குகளே அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அப்போதைய சூழ்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி ஜெயலலிதாவுக்கே தாரைவார்க்கப்பட்ட தொகுதி என்ற நிலை நிலவி வந்தது. இருந்தாலும் திமுக ஜெயலலிதாவுக்கு அவ்வளவு நெருக்கடியை கொடுத்தது.
தற்போது, ஜெயலலிதா மறைவிற்கு பிறகு வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதிமுக இரண்டாக பிளவுற்று இருக்கும் நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பல முனை போட்டி நிலவுகிறது.
சசிகலா தரப்பும் ஒ.பி.எஸ் தரப்பும் நாங்களே உண்மையான அதிமுக என்றும், இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர்.
இதைதொடர்ந்து இருதரப்பையும் இன்று நேரில் ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று சசிகலா தரப்பு மற்றும் ஒ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி முன்பு தங்களது வாதங்களை முன்வைத்தனர்.
பின்னர், விசாரணை நிறைவு பெற்ற நிலையில், தற்போது ஆர்.கே.நகர் இடைதேர்தலில் இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்தது.
தேர்தல் என்று வந்தாலே அதிமுகவுக்கும் திமுகவுக்கும் போட்டி என்பதை விட இரட்டை இலைக்கும் உதயசூரியனுக்கும் தான் போட்டி என்று சொல்பவர்களே அதிகம்.
தற்போது திமுக அதன் பிரதான சின்னமான உதயசூரியன் என்ற சின்னத்திலேயே போட்டியிட உள்ளது.
தேமுதிக மதிவாணன் முரசு சின்னத்திலும், கங்கை அமரன் தாமரை சின்னத்திலும், என அவரவர்கள் அவர்கள் கட்சியின் சின்னத்திலேயே ஆர்.கே நகரில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவை சேர்ந்த ஒ.பி.எஸ் அணியும் சசிகலா அணியும் மட்டும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் வேறு ஒரு சின்னத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதில் வெற்றி நிச்சயம் என்று திமுக வேட்பாளராக நிற்கும் மருதுகணேஷ் படு குஷியில் உள்ளார்.
அதிமுகவின் குழம்பிய குட்டையில் திமுக எப்படியாவது மீன் பிடித்துவிட வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், சின்னத்தை வைத்து மட்டும் நான் செயல்படவில்லை, அம்மாவின் கொள்கைகளை பின்பற்றியே மக்களிடம் வாக்கு கேட்கிறேன். எனவே கண்டிப்பாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை கைபற்றுவேன் என சீறுகிறார் ஒ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் மதுசூதனன்.
மேலும் மக்களும் தொண்டர்களும் எங்களையே ஆதரிக்கின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே யாருக்கும் இது சாதகமாக அமையாது. வீண் கனவு வேண்டாம். இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக மீண்டும் உண்மையின் கை தேடி வரும் என தெரிவித்தார்.
கடந்த 16 தேதி முதல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. நாளையுடன் வேட்பு மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் முடிகிறது. வேறு ஒரு சின்னத்தில் தான் ஒ.பி.எஸ் தரப்பும் சசிகலா தரப்பும் போட்டியிட உள்ளது.
எந்த சின்னத்தில் போட்டியிட போகிறார்கள் என்பது குறித்த முடிவை நாளை காலை 10 மணிக்குள் இருதரப்பும் தெரிவிக்க வேண்டும்.
26 வருடத்திற்கு முன்பு எம்.ஜி.ஆர் மறைவையடுத்து அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போதும் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஜா, ஜெ என்ற அணிகள் உருவாகின.
ஜானகி இரட்டை புறா சின்னத்திலும் ஜெயலலிதா சேவல் சின்னத்திலும் போட்டியிட்டனர். அதேபோல் ஜெயலலிதா போட்டியிட்ட சேவல் சின்னத்தையே கைப்பற்ற இருதரப்பும் முயற்சி மேற்கொள்ள வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
சசிகலா தரப்பு எந்த சின்னத்தில் போட்டியிடுகிறது, ஒ.பி.எஸ் அணி எந்த சின்னத்தில் போட்டியிடுகிறது, எதிர்கட்சிகளை மதுசூதனன் எவ்வாறு வீழ்த்த போகிறார், திமுக எவ்வாறு முன்னேறி செல்கிறது, டி.டி.வி எவ்வாறு தாக்கு பிடிக்க போகிறார் என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.