
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். இதையடுத்து ஓ.பி.எஸ். முதலமைச்சராகவும், ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொது செயலாளராகவும் பொறுப்பேற்று கொண்டனர். இதற்கு அதிமுகவினர் பலர், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை, அரசியலுக்கு வரும்படி அதிமுக தொண்டர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதையொட்டி மாநிலம் முழுவதும் தீபாவை ஆதரித்து போஸ்டர்கள், பேனர்கள், பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். குறிப்பாக சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், தீபாவுக்கு அதிமுக முன்னணி தலைவர்கள் மறைமுகமாக ஆதரவு தருவதாகவும், அவரை அதிமுக பொது செயலாளராக பொறுப்பேற்க காய் நகர்த்துவதாகவும் தினம் தினம் புதிய புதிய செய்திகளாக வந்து கொண்டே இருக்கிறது.
இதற்கிடையில், தீபாவுக்கு ஆதரவு தரும் அதிமுக தொண்டர்களுக்கு சிலர் மிரட்டல் விடுப்பதாகவும் தகவல் பரவியது. இதையடுத்து தீபா, அரசியலில் பிரவேசம் ஆவது உறுதி என்றும், தன்னை நாடி வரும் தொண்டர்களுக்கும், தனக்கும் எவ்வளவு மிரட்டல் விடுத்தாலும், அஞ்ச மாட்டேன் என கூறினார்.
இந்நிலையில் தீபா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நான் அரசியலில் ஈடுபட இருப்பது எனது உறுதியான முடிவு. அதில் எந்த மாற்றமும் இல்லை. தினமும் எனது வீட்டின் முன்பு குவிகின்ற ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களை பார்க்கிறேன். எனக்கு ஆதரவளிக்கும் மக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையில் என்னை பற்றி வதந்திகளை பரப்பி வருகின்றனர். என்னை பற்றி அவர்கள் பரப்பிவரும் பிரச்சாரம் தோல்வியில் முடியும்.
நான், அதிமுக முன்னணி தலைவர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி வருகிறார்கள். அதுபோன்ற பேச்சு வார்த்தை எதுவும் நான் பேசவில்லை. என்னை நம்பி தினமும் என் வீட்டின் முன் ஆயிரக்கணக்கனோர் வருகின்றனர். அவர்களின் நம்பிக்கைக்கு பங்கம் வராமலும், துரோகம் செய்யாமலும் எனது அரசியல் பிரவேசம் நிச்சயம் நிகழும் என்றார்.