
தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருக்கும் வரை எங்களால் ஒரு பேரணி கூட நடத்த முடியவில்லை. ஆனால், முதல்வரா ஓ.பன்னீர் செல்வம் வந்தபின் பேரணி நடந்தி இருக்கிறோம். அவரின் அனுகுமுறை மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 15 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முன்தினம், எழும்பூரில் இருந்து சிந்தாதிரிப் பேட்டை வரை ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் 1000 தொண்டர்கள் பேரணி நடத்தினர். ராமானுஜர், கருகோவிந்த் சிங், டாக்டர் அம்பேத்கர், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி இந்த பேரணி நடத்தப்பட்டது.
இது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் சற்று புருவத்தை உயர்த்தச் செய்யும் நிகழ்ச்சியாக அமைந்துள்ளது.
இது குறித்து ஆர்.எஸ். எஸ். அமைப்பின் மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் என். சடகோபன் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
தமிழகத்தின் முதல்வராக ஓ. பன்னீர் செல்வம் வந்த பின், ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் பேரணி, ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நடத்த முடிகிறது. நாங்கள் மிகவும் சுதந்திரமாக செயல்படுவாக நினைக்கிறோம்.
ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது, நீதிமன்றம் பேரணி நடத்த அனுமதி கொடுத்தால் கூட, அரசு அனுமதிக்காது. உடனடியாகஅதற்கு தடை விதித்துவிடும். அல்லது தடை உத்தரவு பெற்றுவிடும். ஆனால், இன்று நிலைமை அப்படி அல்ல. முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆட்சியை பார்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மகிழ்ச்சி அடைகிறது. நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம்.
தி.மு.க. ஆட்சி நடக்கும் போது, ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த போலீசார் அனுமதி மறத்துவிடுவார்கள். ஆனால், தி.மு.க.தலைவரும், முதல்வராக இருந்த கருணாநிதியையோ அல்லது மூத்த அமைச்சர்கள் சிலரையோ நேரடியாகச் சந்தித்து முறையிட்டு அனுமதி பெற முடியும்.
ஆனால்,ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது, அனுமதி வாங்குவது மிகக்கடினம். வாங்கவே முடியாது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதேபோல் பேரணி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ். எஸ். அமைப்புக்கு அனுமதி கொடுத்தது. ஆனால், சில காரணங்களால் எங்களால் பேரணி நடத்த முடியவில்லை. அது ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.