தேய்கிறதா தலைநகர அ.தி.மு.க..? சாதி சிண்டிகேட்டில் மா.செ.க்கள்! மண்டைகாயும் தொண்டர்கள்..

By Ganesh RamachandranFirst Published Jan 24, 2022, 12:14 PM IST
Highlights

சென்னையின் எட்டு மா.செக்களில் ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, சத்யா மற்றும் ஆதிராஜாராம் ஆகிய நான்கு பேரும் தெலுங்கு மொழி பேசும்குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களாம். இவர்கள் தங்கள் சமுதாயத்தை சேர்ந்தோரை மட்டுமே கட்சியில் வளர வைப்பதாக ஒரு புகார் எழுந்துள்ளது

‘ஒன்றே குலமென்று பாடுவோம், ஒருவனே தேவனென்று போற்றுவோம்!’ என்று பல்லாண்டு வாழ்க படத்தில் பதமாய் பாடியிருந்தார் அ.தி.மு.க.வின் நிறுவன தலைவரான எம்.ஜி.ஆர். இன்று தமிழகத்தின் தலைநகரில் அவரது கட்சி ஒரு குறிப்பிட்ட குலத்தின் (ஜாதியின்) சிண்டிகேட்டில் சிக்கி தவிப்பதாக அக்கட்சிக்குள் இருந்தே வெளிப்படையாக புகார் வெடித்திருப்பதுதான் வேதனை.

மேட்டர் இதான்பா…. அதாவது சென்னை அ.தி.மு.க.வுக்கு எட்டு மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். ஜெயக்குமார், ஆதி ராஜாராம், பாலகங்கா, விருகை ரவி, வேளச்சேரி அசோக், தி நகர் சத்யா, வெங்கடேஸ் பாபு, ராஜேஷ் ஆகியோர்தான் அந்த 8 பேர்.  ஒருவருக்கு இரு சட்டசபை தொகுதிகள் என இந்த எட்டு பேரின் கையில்தான் தலைநகர அ.தி.மு.க. இருக்கிறது. பத்து வருடங்களாக ஆளுங்கட்சியாக இருந்து வளம் கொழித்த இவர்களால் சென்னையில் ஒரு தொகுதியை கூட வெற்றி பெற வைக்க முடியவில்லை. எனவே இவர்களை உடனடியாக தூக்கிவிட்டு புதிய நபர்களை போட வேண்டும் என்று ஒரு புகைச்சல் தேர்தல் முடிவுகளுக்குப் பின் இருந்தே எழுந்தது.

ஆனாலும் எந்த மாற்றமும் இல்லை. இந்த நிலையில் சென்னை அ.தி.மு.க.வில் ஒரு புதிய புகைச்சல் எழுந்துள்ளது. அதாவது இந்த எட்டு பேரில் ராஜேஷ், வெங்கடேஷ் பாபு, சத்யா மற்றும் ஆதிராஜாராம் ஆகிய நான்கு பேரும் சுத்த தமிழர் அல்லாத வேறு மொழி பேசக்கூடியவர்களாம், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்களாம். இவர்கள் தங்களுக்குள் ஒரு சிண்டிகேட் அமைத்துக் கொண்டு, தங்கள் சமுதாயத்தை சேர்ந்தோரை மட்டுமே கட்சியில் வாழ, வளர வைப்பதாக ஒரு புகார் எழுந்துள்ளது. இதனாலேயே தலைநகர கட்சி தறுதலையாக போய்க் கொண்டிருப்பதாக கடும் குமுறல்கள் வெடித்துள்ளன.

தி.நகர் சத்யா, ஆதி ராஜாராம், ராஜேஷ், வெங்கடேஷ் பாபு

இந்த நால்வரில் வெங்கடேஷ்பாபு ஜெயலலிதா காலத்தில் இருந்து மாவட்ட செயலாளராக இருக்கிறாராம். ஜெ.,வுக்கு பின் இவர் அந்த பகுதியுள்ள தன் சமுதாயத்தை சேர்ந்த  தி.மு.க. வி.ஐ.பி.க்களுடன் செம்ம அண்ட்கோவில் இருப்பதாக குற்றச்சாட்டுகள் குவிகின்றன. முதல்வரின் கொளத்தூர் தொகுதி இவரது கட்டுப்பாட்டில்தான் வருகிறது. ஆனாலும் இந்த எட்டு மாதங்களில் சொல்லிக் கொள்ளும் படியாக ஒரு எதிர்ப்பு நிகழ்ச்சி கிடையாதாம். இவரைப்போலவேதான் ராஜேஷும் செயல்படுவதாக புகார் வெடித்துள்ளது. ஆதிராஜாராமும் தன் சமுதாயத்தை சேர்ந்த தி.மு.க. அமைச்சர் ஒருவருடன் ஃபுல் அண்டர்ஸ்டாண்டிங்கில் இருப்பதாக புகார். சத்யாவும் கொஞ்சமும் குறைவில்லாத புகார்களுக்கு ஆளாகியிருக்கிறார். ஒரே நாளில் 140 நிர்வாகிகளை கட்சியிலிருந்து கட்டங்கட்டிய திருக்காரியத்தை செய்தவரை இன்னமும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் வைத்து அழகு பார்க்கிறது தலைமை! என பொங்குகிறார்கள்.

எட்டு மா.செ.க்களில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த நான்கு பேர் செய்யும் சிண்டிகேட் பாலிடிக்ஸாலும், தி.மு.க. வி.ஐ.பி.க்களுடன் இவர்கள் அண்டர்ஸ்டாண்டிங்கில் இருப்பதாலும் தலைநகர அ.தி.மு.க. தறுதலையாக போய்க்கொண்டிருப்பதாக தலைமைக்கு தொடர்ந்து புகார்கள் பறந்த வண்ணம் உள்ளன. அப்படி புகார் தெரிவிப்பவரில் முக்கியவரான தலைமை கழக பேச்சாளர் எழில் கே.ஏ.ஏழுமலை “அம்மா கட்டுப்பாட்டில் கட்சி இருந்தவரை தவறும் செய்யும் மாவட்ட செயலாளர்கள் உடனடியாக தூக்கி எறியப்பட்டனர். ஆனால் இப்போது அப்படி இல்லை. எல்லோரும் குறுநில மன்னராகிட்டாங்க. சென்னையில் மட்டும் இவர்களின் ஆட்டமோ அதிகமாக உள்ளது. இவர்களை உடனடியாக அடக்க வேண்டும், அதிரடி நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும்.” என்கிறார்.

ஒரே சமுதாயத்தினவராக இருந்து கொண்டு சிண்டிகேட் போட்டு கட்சியை கெடுக்கிறீர்களா? என நான்கு மாவட்ட செயலாளர்களிடம் கேட்டபோது “அ.தி.மு.க. அப்படிங்கிறது ஒரு தேசிய இயக்கம். இதுல எல்லா சமுதாயத்தினரும் உறுப்பினர்களா இருக்கோம். எல்லா சமுதாயத்தினரும் நிர்வாகிகளாகவும் இருக்கிறோம். இதுல எங்கே இருந்து ஒரு சாதி சிண்டிகேட் அப்படிங்கிறது வந்துச்சு? சாதி பார்த்து தலைமை எங்களுக்கு பதவியும் தரல, நாங்க சாதி பார்த்து அரசியலும் பண்ணலை. இந்த எட்டு மாத காலத்தில் தலைநகரில் தி.மு.க.வை எதிர்ப்பு அரசியலால் திணறடித்துக் கொண்டிருக்கிறோம்.” என்கிறார்களாம்.

தூரத்து ரேடியாவுல ஒரு பாட்டுச் சத்தம்! அது என்ன வரி ஆங்…..’சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து, தோணிகளோட்டி விளையாடி வருவோம்’….ஆஹா ஆஹஹா!

click me!