
அதிமுக என்ற அமைப்பு தாய், தந்தை இல்லாத அனாதைபோல் ஆகிவிட்டது என அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். இதுபற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் தாய், தந்தை இல்லாத அனாதையை போல் அதிமுக நிற்கிறது. இரு அணிகளாக பிரிந்து மீண்டும் இணையும் தருவாயில் உள்ளது. ஆனாலும், நாங்கள் முழு கட்டுப்பாட்டுடன் இருந்து வருகிறோம். எங்களிடம் கருத்து வேறுபாடு இருக்கிறது. பிரிவினை இல்லை.
நாங்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அண்ணன், தம்பிகளுக்குள் ஆயிரம் கருத்து வேறுபாடு இருக்கும். ஆனால், எங்களது குடும்பம் அதிமுகதான். வரும் 4 ஆண்டுகள் மட்டுமல்ல, வரும் 2021ம் ஆண்டு தேர்தலிலும் அதிமுக வெற்றி பெற்று, தொடர்ந்து ஆட்சியை பிடிக்கும்.
இரு அணிகள் இணைவது குறித்த பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது. அதற்காக தனி குழு அமைத்துள்ளோம். அவர்கள் பேசி அனைத்து முடிவுகளையும் எடுப்பார்கள்.
இரு அணிகள் குறித்து யாரிடமும், எதையும் சொல்லக் கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். அதனால், அதை பற்றி நான் எதுவும் கூறமுடியாது. அட்சியை பற்றியோ, என்னுடைய துறையை பற்றியோ கேளுங்கள் விரிவாக பேசுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.