ஜெயலலிதா எதிர்த்த திட்டத்தில் கையெழுத்திடுகிறது ஓபிஎஸ் அரசு

First Published Jan 6, 2017, 5:11 PM IST
Highlights


ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை எதிர்த்த மத்திய அரசின் 4 திட்டங்களில் ஒப்புதல் அளித்து கையெழுத்திட ஓபிஎஸ் அரசு முடிவு செய்துவிட்டது. முதல் திட்டத்தில் அமைச்சர் தங்கமணி கையெழுத்திடுகிறார்.
ஜெயலலிதா முதல்வராக இருக்கும் வரை மத்திய அரசின் பல திட்டங்களை எதிர்த்து வந்தார். என்னதான் மோடிக்கு நண்பர் , பாஜக வுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டாலும் ஜெயலலிதா தனது அரசியல் பாதையில் தெளிவாக இருந்தார். 
பாராளுமன்ற தேர்தலில் மத்திய அரசின் தேவையை கருதி மோடியுடன் கூட்டணி வைப்பார் என எல்லோரும் எதிர்பார்த்தபோது மோடி இல்லை இந்த லேடி தான் தமிழகத்தில் என்று தைரியமாக பேசி 37 இடங்களை வென்றும் காட்டினார். 


அதன் பின்னர் இந்தியாவிலேயே 50 பாராளுமன்ற உறுப்பினர்களை இரு அவைகளிலும் கொண்ட 3 வது பெரிய  கட்சி என்ற பெருமையுடன் அதிமுக அமர்ந்தது . மோடியுடன் நட்பு பாராட்டினாலும் தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் மத்திய அரசுக்கு தனது எதிர்ப்பை காட்டி வந்தார். ஜிஎஸ்டி மசோதாவில் மாநில நிதி ஒதுக்கீடு விஷயத்தில் முரண்பட்டு எதிர்த்தார். 
மத்திய அரசின் மின்சாரம் கொள்கை திட்டமான உதய் திட்டத்தில் இணைய கடைசி வரை மறுத்துவிட்டார். அந்த துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கூட தரவில்லை. 
அதே போல் உணவு பாதுகாப்பு மசோதாவுக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தார், நான்காவதாக மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவர் மருஹ்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நேரத்திலேயே இந்த நான்கு திட்டங்களுக்கும் ஓபிஎஸ் அரசு ஒப்புதல் வழங்கி இசைவை தெரிவித்தது. 
இதில் முதல் திட்டமான  மத்திய அரசின் மின்சார திட்டமான உதய் திட்டத்தில்  தமிழக அரசு இணையவுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் வரும் திங்கள் அன்று டெல்லியில் கையெழுத்தாக உள்ளது.  மறைந்த  முதல்வர் ஜெயலலிதா கடைசி வரை எதிர்த்த திட்டத்தை அவரது அமைச்சரவையில் இருந்து ஓபிஎஸ் அமைச்சரவையிலும் தொடரும் மின் துறை அமைச்சர் தங்கமணி கையெழுத்திட உள்ளார் எனபது குறிப்பிட தக்கது.

click me!