இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழு... சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க அதிரடி முடிவு?

By Asianet TamilFirst Published Nov 24, 2019, 7:35 AM IST
Highlights

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி,  இரட்டைத்தலைமைக்கு எதிர்ப்பு என சில சலசலப்புகள் கட்சிக்குள் எழுந்தன.  இந்நிலையில் விரைவில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழ்நிலையில் அதற்கு முன்பாகப் பொதுக்குழுவை கூட்டஅதிமுக முடிவு செய்தது. இரு அமைச்சர் பதவிகள் காலியாக இருக்கும் நிலையில், அமைச்சர் பதவியைப் பெற பலரும் முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் இரட்டை  தலைமை, அமைச்சர் பதவி தொடர்பாக யாராவது பேசுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.

ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டில் மறைந்தார். அவர் மறைந்த பிறகு டிசம்பர் 29ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தற்காலிக பொதுச்செயலராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அந்தப் பொதுக்குழு கூட்டத்துக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் பதவி பறிப்பு, சசிகலா பொதுச்செயலாளராகப் பதவியேற்பு, சசிகலா சிறைக்கு சென்றது, எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானது என அதிமுகவில் அடுத்தடுத்து காட்சிகள் அரங்கேறின. அதிமுக ஈபிஎஸ் - ஓபிஎஸ் அணிகள் என இரு அணிகளாக கட்சி உடைந்தது.


பின்னர் இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் இணைந்தன. இதனையடுத்து 2017 செப்டம்பர் 12ல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்பட்டார். மேலும் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. புதிதாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகள் உருவாக்கப்பட்டன. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி, துணை ஒருங்கிணைப்பாளர்களாக கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
மேலும் கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்க வழிகாட்டி குழு ஒன்றை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அக்குழு அமைக்கப்படவில்லை. கடந்த ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றிருக்க வேண்டும், ஆனால். அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவில்லை. கஜா புயலைக் காரணம் காட்சி 2019 ஜூன் வரை கூட்டத்தை தள்ளி வைத்துக்கொள்ள  தலைமை தேர்தல் ஆணையத்தில் அதிமுக அனுமதி பெற்றது. ஆனாலும், பொதுக்குழு கூட்டம் நடைபெறவில்லை.


இதற்கிடையே நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி,  இரட்டைத்தலைமைக்கு எதிர்ப்பு என சில சலசலப்புகள் கட்சிக்குள் எழுந்தன.  இந்நிலையில் விரைவில், உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழ்நிலையில் அதற்கு முன்பாகப் பொதுக்குழுவை கூட்டஅதிமுக முடிவு செய்தது. இதன்படி இன்று காலை சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் காலை 10:30 மணிக்கு அதிமுக செயற்குழு மற்றும் பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில்  3,000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 300 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். 
இரு அமைச்சர் பதவிகள் காலியாக இருக்கும் நிலையில், அமைச்சர் பதவியைப் பெற பலரும் முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் இரட்டை  தலைமை, அமைச்சர் பதவி தொடர்பாக யாராவது பேசுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பாக இன்று தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும் அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

click me!