ADMK Election:மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் ஓபிஎஸ், இபிஎஸ்.. ஒருபுறம் நீதி மன்ற வழக்கு.. மறுபுறம் போலீஸ் கேஸ்.

By Ezhilarasan BabuFirst Published Dec 4, 2021, 10:32 AM IST
Highlights

அதிமுக தலைமை கழகத்தில் விருப்ப மனு நேற்று தொடங்கியது. அப்போது விருப்ப மனு வாங்க வந்த நபரை அங்கிருந்த இபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விரட்டியடித்தனர்.

நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு  விருப்ப மனு கொடுக்க  சென்றவரை தாக்கிய வழக்கில் அதிமுக தலைமை அலுவலக மேனேஜர் உட்பட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது ஓபிஎஸ் இபிஎஸ்சை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சசிகலாவுக்கு ஆதரவாக ஓபிஎஸ்  குரல் கொடுக்கப்போகிறார்,எடப்பாடியை எதிர்க்க போகிறார் என பலரும் ஆருடம் கூறிவந்த நிலையில் ஒருவழியாக ஓபிஎஸ் இபிஎஸ் மோதல் முடிவுக்கு வந்துள்ளது. இருவரும் தங்கள் பதிவியை தக்கவைத்துக் கொள்ளும் வகையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வருகிற 7ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். 11ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடந்து அது  மோதலில் முடிந்தது. அதனால் எந்த முடிவும் அதில் எடுக்கப்படவில்லை. அதில் செங்கோட்டையன், அன்வர்ராஜா போன்ற மூத்த உறுப்பினர்கள் பேசியது கட்சியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் அன்வர்ராஜாவை கட்டம் கட்டிய ஓபிஎஸ் இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டு அவரை கட்சியில் இருந்து தூக்கினர். இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் பொதுச்செயலாளர் பதவியை தவிர்த்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் நேரடித் தேர்தல் மூலம் தேர்வு செய்வது என்று முடிவு செய்யப்பட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் 7ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதற்கான தேர்தல் நடைபெறும் என்றும், 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், அதற்கு தேர்தல் ஆணையராக பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் அதிமுக தலைமை கழகத்தில் விருப்ப மனு நேற்று தொடங்கியது. அப்போது விருப்ப மனு வாங்க வந்த நபரை அங்கிருந்த இபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர்கள் விரட்டியடித்தனர். இது தற்போது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நேற்று ஓட்டேரி பாஷ்யம் ரெட்டி முதல் தெருவை சேர்ந்த முதியவரான ஓம்பொடி பிரசாத் சிங்(71) என்பவர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பபடிவம் வாங்க ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அப்போது முறைப்படி பணத்தை செலுத்தி விண்ணப்ப படிவத்தை கேட்ட போது, அதிமுக நிர்வாகிகள் சிலர் விண்ணப்ப படிவம் தர மறுத்து ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரசாத் சிங் நியாயம் கேட்ட போது நிர்வாகிகள் சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஓம்பொடி பிரசாத் சிங் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

குறிப்பாக ஓபி.எஸ் மற்றும் இபி.எஸ் தூண்டுதலில் பேரிலேயே தன் மீது தாக்குதல் நடத்தியதாகவும், உடனடியாக அதிமுக தலைமை அலுவலக மேனேஜரான மகாலிங்கம், மனோகர் உட்பட 10 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் தெரிவித்திருந்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் அதிமுக தலைமை அலுவலக மேனேஜர் மகாலிங்கம், மனோகரன் உட்பட 10 பேர் மீது கலகம் செய்தல், முறையற்று தடுத்தல், காயம் ஏற்படுத்துதல், சேதம் உள்ளிட்ட  4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த உள்கட்சி தேர்தலை கனகச்சிதமாக முடிக்க வேண்டும் என்று ஓபிஎஸ்- இபிஎஸ் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டுவரும் நிலையில், இந்த தேர்தலையே நடத்தக் கூடாது இதை தடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிச்சாமி நீதி மன்றத்தில் கதவை தட்டியுள்ள நிலையில், நேற்று நடந்த அடிதடி பஞ்சாயத்து காவல் நிலையம் வரை சென்றிருப்பது ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பை அதிர்சியடைய வைத்துள்ளது.  

 

click me!