
அது ஒரு அழகிய நாடக காலம்... பெண் சிங்கமாக ஜெயலலிதா அரசியலையும், தமிழகத்தையும் ஆண்டபோது அவரது அபிமானத்தை பெற வேண்டும் என்பதற்காக அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும், இதர நிர்வாகிகளும் காட்டும் பவ்யங்களுக்கும், நடத்தும் நாட்கங்களுக்கும் எல்லையே இருக்காது.
‘அம்மா இருக்கும் இடம் கோயில். நான் அங்கே செருப்பு அணிந்து செல்ல மாட்டேன்.’ என்று அகில உலக பணிவை காட்டினார் அமைச்சர் உதயகுமார்.
‘அம்மா பிடிச்சு வெச்சா புள்ளையார். இல்லேன்னா நாங்க எல்லாரும் வெறும் சாணிதான்.’ இப்படி பேசியது அமைச்சர் செல்லூர் ராஜூ.
‘அம்மாவின் கண்ணருகில் ஒரு தூசி பறந்தாலும் எங்களுக்கும் இதயம் வெடித்துவிடும்.’ என்றவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
ஜெயலலிதா அமர்ந்திருந்த காரின் முன்சக்கர டயர்களை குனிந்து தொட்டு வணங்கி, போலி அடிமைத்தனத்திற்கு புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்தார் ஓ.பன்னீர் செல்வம். கூடவே ‘எங்கள் குலதெய்வம்’ என்று கும்பிடு போட்டவர்.
எந்த இடம், எந்த சூழல் என்று எதையும் பார்க்காமல் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து ஜெயலலிதாவின் பாதம் தொட்டுத் தொட்டு வணங்கியவர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
இவற்றுக்கெல்லாம் மேலாக இவர்கள் அத்தனை பேரும் போயஸ் கார்டனையும், கொடநாடு பங்களாவையும் ‘தெய்வம் வாழும் ஆலயம்! எங்களின் கோவில்’ என்று மண்டியிட்டு மாவிளக்கு வைத்தவர்கள். இவர்களின் இந்த அடிமைத்தனத்தை பார்த்து மனம் விட்டுச் சிரித்த ஜெயலலிதா ‘நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் பணிவானவர்கள்’ என்று நினைத்துக் கொண்டார்.
ஆனால் இவர்கள் எத்தனை காரியவாதிகள் என்பது அவரது மரணத்திற்கு பிறகுதான் தெரியவந்திருக்கிறது அகிலத்துக்கு.
அம்மாவின் ஆட்சி! அம்மாவின் ஆட்சி! எனும் தலைப்புடன் எடப்பாடி மற்றும் பன்னீர் இருவரும் அ.தி.மு.க.வின் ஆட்சி லகானை பி.ஜே.பி.யிடம் கொண்டு அடகு வைத்திருப்பதாக விமர்சனங்கள் பொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் நேற்றைய போயஸ் ரெய்டுக்குப் பின் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் இருவரும் மெளனம் காப்பது அ.தி.மு.க.வின் உண்மை விசுவாசிகளை மனம் பொங்க வைத்திருக்கிறது. ‘நீங்கள் காரியவாதிகள் மட்டுமில்லை பச்சி துரோகிகள்.’ என்று வெடித்து விமர்சிக்க துவங்கியுள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் ஜெயலலிதாவால் ‘நடையில் கால் வைக்காதே!’ என்று துரத்தப்பட்ட தினகரனின் ஆணைப்படி அதரவாளர்கள் போயஸில் கூடி நின்று ‘எங்கள் தெய்வத்தின் கோவிலினுள் நுழையாதே’ என்று போராடி கைதானதும், தூத்துக்குடியிலிருந்த தினகரன் ‘வேதா நிலையம் எங்கள் கோயில், அம்மாவின் அறைதான் கர்ப்ப கிரகம்.’ என்று உருகி பேசியிருப்பதும் அக்கட்சியின் உண்மை விசுவாசிகளை தினகரனை நோக்கி திரும்ப வைத்திருப்பதில் எந்த சந்தேகமுமில்லை என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.