
பன்னீர் அணியுடன் இணைப்பு அவசியம் இல்லை என்று கூறும் முதல்வர் எடப்பாடி, உள்ளாட்சி தேர்தலை தனித்து நின்று சந்திக்க முடிவு செய்துள்ளார்.
சசிகலா உறவினர்கள் அரசியலை விட்டு ஒதுக்கப்பட்டதாக வெளியான அறிவிப்பு தினகரன் நடத்தும் நாடகம் என்று கூறி வரும் பன்னீர், ஊர், ஊராக சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளார்.
இதனிடையே, இளவரசி மகன் விவேக்கை துணை பொது செயலாளர் ஆக்க சசிகலா திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பன்னீர் அணியுடன் இணைப்பு தேவை இல்லை. 90 சதவிகித கட்சி நிர்வாகிகளும், 123 எம்.எல்.ஏ க்கள், 29 எம்.பி க்கள் தம்முடன் இருப்பதால், உள்ளாட்சி தேர்தலை தனித்தே சந்திக்கலாம் என்று எடப்பாடி கூறி வருகிறார்.
சேலத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி, இதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். மேலும், ஆட்சியை கவிழ்க்க நினைக்கும் ஸ்டாலினின் திட்டம் பலிக்காது என்றும் அவர் கூறி இருக்கிறார்.
மறுபக்கம், நாங்கள் திறந்த மனதுடன் அழைக்கிறோம். ஆனால் பன்னீர் தரப்பினர்தான் போக்கு காட்டி வருகின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கூறி வருகின்றனர்.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்த காலத்தில் கூட, அதிமுக பல நெருக்கடிகளை சந்தித்தது. ஆனால் தொண்டர்கள் உறுதியாக நின்று அதை முறியடித்தனர் என்று எடப்பாடி கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை.
ஆனால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவர்களாக விளங்கினர். தொண்டர்களை கட்டுப்படுத்தி வழிநடத்தும் ஆளுமை அவர்களிடம் இருந்தது.
ஆனால், தற்போது, மக்கள் தலைவர் என்று சொல்லும் அளவுக்கு அதிமுகவில் யாரும் இல்லை.
அதனால், அணிகள் இணையுமா? ஆட்சி நிலைக்குமா? இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? என்ற கேள்விகளுக்கு விடை காண முடியாமல் அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர்.