மு.க. ஸ்டாலின் வாயை மூடுங்க... தேர்தல் ஆணையத்தை நாடும் அதிமுக..!

By Asianet TamilFirst Published Mar 29, 2019, 6:55 AM IST
Highlights

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜெயலலிதா மரணம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுவதைத் தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக புகார் மனு அளித்துள்ளது.

தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பேசிவருகிறார். திமுக ஆட்சி அமைந்த பிறகு ஜெயலலிதா மரணத்துக்கு காரணமான எல்லோரும் தண்டிக்கப்படுவார்கள் என்று எல்லா இடங்களில் பேசிவருகிறார். ஸ்டாலினின் இந்தப் பேச்சு அதிமுகவினரை உசுப்பேற்றியுள்ளது. ஸ்டாலினின் இந்தப் பேச்சை ஏற்கனவே அமைச்சர்கள் பலரும் விமர்சித்திருந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையத்தில் இதுதொடர்பாக புகார் மனுவையும் அக்கட்சி சமர்பித்துள்ளது.
அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துவிட்டு அக்கட்சி செய்துதொடர்பாளர் பாபு முருகவேல் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின், அவரோடு மறைமுகமாக கூட்டணி வைத்திருக்கும் நபரை காப்பாற்றுவதற்காக, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தை குறை கூறும் விதமாகப் பேசிவருகிறார்.


'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தனி விசாரணை குழு அமைத்து, ஜெயலலிதா மரணத்தில் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவருவோம்’ எனப் பேசிவருகிறார். தற்போது இந்த விவகாரம் நீதிமன்றம் மற்றும் விசாரணை ஆணையத்தில் நிலுவையில் உள்ளது. அது தொடர்பான கருத்துகளை பொதுவெளியில் பகிரக் கூடாது என்பது மரபு. ஆனால், ஸ்டாலின் விசாரணை ஆணையத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிவருகிறார். இதைத் தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்.” என்று  தெரிவித்துள்ளார்.
 

click me!