பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் வருகிற 1 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மாணவி மீது தாக்குதல்- அதிமுக போராட்டம்
திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளால் கொடுமை செய்யப்பட்ட மாணவி ரேகாவின் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுகாத திமுக அரசு கண்டித்து அதிமுக சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வசிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பல்லாவரம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கருணாநிதியின் மகன், மருமகள் மீது கொடுத்துள்ள புகார் நாட்டையே உலுக்கி இருக்கிறது.
கருணாநிதியின் மகனும், மருமகளும் வீட்டு வேலைகளை செய்வதற்கென்று, கொத்தடிமை போல தன்னை அழைத்துச் சென்று சித்ரவதை செய்த கொடூரத்தை அந்த மாணவி விவரித்த காட்சிகள் பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியாகி, மனிதாபிமானமுள்ள அனைத்து மக்களின் மனசாட்சியையும் உலுக்கி இருக்கிறது.
பட்டியலின மாணவி சித்தரவதை
பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகனும், மருமகளும் தன்னை அடித்து ரத்தக் காயம் ஏற்படுத்தியதாகவும், கைகளில் சூடு வைத்து தோல் கருகி உரிந்து வருகின்ற வரையில் சித்ரவதை செய்ததாகவும், சிகரெட் நெருப்பால் சூடு வைத்ததாகவும், மாணவியின் வாய் பகுதியில் நெருப்பு வைத்து எரித்ததாகவும், தலையில் பலமாக அடித்து மண்டை உடைந்து ரத்தம் வந்தபோதும் விடாமல் துன்புறுத்தியதாகவும், மாணவியை நிர்வாணப்படுத்தி உடல் முழுவதும் தாக்கி சித்ரவதை செய்ததாகவும், காயங்களைக் காட்டி அந்த மாணவி கொடுத்துள்ள புகாரும், நேர்காணலும், சாதாரண குடிமக்களின் ரத்தத்தை உறைய வைக்கின்ற செய்தியாக மாறி இருக்கிறது.
கொத்தடிமையாக நடத்தப்பட்ட மாணவி
மேலும், கருணாநிதியின் மகனும், மருமகளும் ஜாதியைச் சொல்லி தன்னை கொடுமைப்படுத்தியதையும், பாலியல் ரீதியான அருவருக்கத்தக்க அவதூறு வார்த்தைகளால் தன்னை வசைபாடியதையும், கொத்தடிமையாக நடத்தியதையும், அவர்களிடமிருந்து தப்பி வந்து அந்த மாணவி அம்பலப்படுததி உள்ளார்.மனித வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ள நாட்டில், 17 வயது மாணவியை விலைபேசி வாங்கி வந்து, ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கி கொத்தடிமை முறையை ஒரு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் குடும்பமே நடைமுறைப்படுத்தி உள்ளது என்பது ஏற்க முடியாத அவலம்.
எதிர்க்கட்சி மற்றும் மனித உரிமை அமைப்புகளின் தொடர் வலியுறுத்தலாலும், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் அம்பலப்பட்டுப் போனதாலும் வேறு வழியின்றி காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. ஆனாலும், திரு. கருணாநிதியின் மகனும், மருமகளும் இப்பொழுதுவரை கைது செய்யப்படவில்லை. தலைமறைவாகிவிட்டதாகவும், தேடி வருவதாகவும் சொல்லி நாட்டு மக்களை ஏமாற்றி வருகிறது இந்த விடியா திமுக அரசு.
அதிமுக போராட்டம்- எடப்பாடி அறிவிப்பு
திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கருணாநிதி தனக்கும், இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்கிறார். ஆனால், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரின் பதவியை சொல்லித்தான் அவருடைய மகனும், மருமகளும் கொலை மிரட்டல் செய்தார்கள் என்று மாணவி நேரடியாகவே குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில், கருணாநிதி தனக்கு தொடர்பில்லை என்று சொல்வதும், காவல்துறை கைது செய்யாமல் காலம் கடத்துவதும், திமுக அதிகார வர்க்கம் வழக்கம்போல குற்றவாளிகளைக் காப்பாற்ற தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது.
எனவே பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவிவிட்ட இந்தக் கொடூர நிகழ்வில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாகக் கைது செய்து, உரிய தண்டனை பெற்றுத்தர வலியுறுத்தியும் அதிமுக சார்பில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், 1.2.2024 - வியாழக் கிழமை காலை 10 மணியளவில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்