
சிதம்பரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில சந்திர சேகரும் , அமமுக சார்பில் இளவரசனும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் பரங்கிப்பேட்டை அருகே உள்ள ஆயிபுரம் கிராமத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழகம் முழுவதும் மோடிக்கு எதிரான அலை வீசுகிறது. அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க சதி திட்டம் தீட்டுகின்றனர் என குறிப்பிட்டார்..
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் யாரும் நாடாளுமன்றத்துக்குள் நுழையக் கூடாது என்று பாஜக வினர் நினைக்கின்றனர். இதனால் என்னை தோற்கடிக்க அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் சிதம்பரம் தொகுதியில் ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர் என திருமா குற்றம்சாட்டினார்..
அதற்கு காரணம் நான் பாஜக மற்றும் அதிமுக கட்சிகளின் மதவாதம் ஆகியவற்றை எதிர்த்து பேசுவதுதான். ஏழை மக்களுக்காக, விவசாயிகளுக்காக பேசுவதாலும் எதையும் கண்டித்து பேசுவதாலும் ஆத்திரத்தில் என்னை தோற்கடிக்க பணத்தை இறக்கி உள்ளனர்.
திருச்சியில் எங்கள் கட்சியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் காரை சோதனையிட்டு அவர் தொழிலுக்காக வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து அந்த சம்பவத்தை தேர்தலோடும் என்னோடும் முடிச்சு போட்டு வேண்டு மென்றே என் மீது களங்கத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சியினர் முயற்சி செய்கின்றனர்.
விடுதலைச் சிறுத்தை கட்சியிலே தொழில் அதிபர்கள் இருக்கக் கூடாதா? ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் எவரிடமாவது இது வரை சோதனை நடந்துள்ளதா? அவர்கள் தேர்தல் விதி முறைகளுக்கு உட்பட்டுதான் செலவு செய்கிறார்களா? என திருமா கேள்வி எழுப்பினார்.