முடிவானது அதிமுக – பாஜக கூட்டணி….. தமிழ் மாநில காங்கிரசும் இணைகிறது… அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது ?

By Selvanayagam PFirst Published Feb 5, 2019, 6:35 AM IST
Highlights

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலை கூட்டணி அமைப்பது குறித்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திரைமறைவில் நடந்த வந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., ஆகிய கட்சிகள் இடையே முதல் கட்டமாக கூட்டணி உடன்பாடு எட்டியுள்ளது. இந்த கூட்டணியில்  தேமுதிக மற்றும் தமாக ஆகிய கட்சிகளும் இணைய உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஏப்ரல் , மே மாதங்களில் நாடாளுமனறத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே திமுக – காங்கிரஸ் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் மதிமுக, இடது சாரிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இணைகின்றன.

இதே போல் அதிமுக-பாஜக- பாமக –தேமுதிக  புதிய தமிழகம் கட்சிகள் இணைந்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. இநநிலையில்  அதிமுக  சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தலைமையில் நேற்று நடந்தது. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறும் பணியும் தொடங்கியுள்ளது.

இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக திரைமறைவில் பாஜக அதிமுக முக்கிய தலைவர்களுடன் நடத்திய பேசு வார்த்தையில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த 2 ஆம் தேதி மத்திய , மாநில அமைசசர்கள்  ஒரு மணி நேரம் தனியாக பேசி கூட்டணியை இறுதி செய்துள்ளனர். அதேபோல் நேற்று அமாவாசை நாள் என்பதால் பாமகவைச்  சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவரை, அதிமுக தொழிலதிபர்கள் சிலர் சந்தித்து கூட்டணியை உறுதி செய்துள்ளனர்.


இதன் முதல் கட்டமாக அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., ஆகிய கட்சிகள் இடையே கூட்டணி அமைப்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு குறித்து பாஜக, - பா.ம.க., கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை அ.தி.மு.க. மேலிடம் வெளியிட திட்டமிட்டுள்ளது.

அதே நேரத்தில்  தேமுதிகவிடம்  அக்கட்சியின் தலைவர் விஜயகாந்துக்கு அமெரிக்காவில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முடிந்ததும் அவரது மனைவி பிரேமலதாவுடன் பேச்சு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பாஜகவுக்கான  உள்ஒதுக்கீட்டில் கொங்கு தேசிய கட்சிக்கும், புதிய தமிழகம் கட்சிக்கும் தொகுதிகள் ஒதுக்கவும் பேசப்பட்டு உள்ளது. இதற்கிடையில் அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரசும் இணைய உள்ளதாக தெரிகிறது.

திருப்பூரில் வரும் 10ம் தேதி நடக்கும் பா.ஜ., தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இதில் அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்க உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

click me!