ADMK : வழிவிட்டால் அதிமுக வீரியமாக வளரும்... மறுத்தால் நஷ்டம் கட்சிக்கே... ஜெயலலிதா உதவியாளர் சரவெடி அட்வைஸ்!

By Asianet TamilFirst Published Jan 28, 2022, 10:04 PM IST
Highlights

இதயதெய்வம் அம்மா இருக்கும் போது பேரவை, இளைஞர் அணி, மாணவரணியில் உள்ளவர்களுக்கு வயது நிர்ணயம் செய்தார். ஆனால், அது இன்று நடைமுறையில் இல்லை.

இளைஞர்களை, இளம்பெண்களை ஊக்குவித்தால் மட்டுமே கழகம் உற்சாகம் அடையும். வீரியமாய் வளரும். அனுபவம் வழிநடத்த வேண்டும். வழிவிட மறுத்தால் நஷ்டம் கழகத்துக்கே என்று ஜெயலலிதாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பூங்குன்றன் தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதா இருந்தவரை அவருடைய உதவியாளராக இருந்த பூங்குன்றன், ஜெயலலிதா பற்றிய நினைவலைகளையும் அதிமுகவில் நடக்கும் நிகழ்வுகளையும் அவ்வப்போது ஃபேஸ்புக்கில் எழுதுவார். அவருடைய கருத்துகள் விமர்சனமாக அறிவுரையுமாக இருக்கும். அதிமுக தலைமைக்கு உணர்த்தும் வகையில் பல விஷயங்களை எழுதுவார். இந்நிலையில், அதிமுக நிர்வாகி ஒருவரை சந்தித்தது தொடர்பாக பூங்குன்றன் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில், “இன்று கட்சிக்காரர் ஒருவரை சந்தித்தேன். வயது 55 இருக்கும். நன்றாக பேசிக்கொண்டிருந்தார். கட்சியைப் பற்றி, இப்போது போகிற போக்கைப் பற்றி சுவாரஸ்சியமாக பேசிக் கொண்டிருந்தோம். நேரம் போனதே தெரியவில்லை.

நீங்கள் இப்போது என்ன பொறுப்பில் இருக்கிறீர்கள் என்று கேட்டேன். மாணவரணியில் இருக்கிறேன் என்றார். நான் அடுத்த கேள்வியை கேட்பதற்குள், அவரே சுதாரித்துக்கொண்டு எனக்கு வயதாகிறது. என்னை மாற்றி ஒரு இளைஞருக்கு கொடுக்கலாம். ஆனால், நடக்கவில்லை. இதில் எனக்கே வருத்தம் என்றார். இதயதெய்வம் அம்மா இருக்கும் போது பேரவை, இளைஞர் அணி, மாணவரணியில் உள்ளவர்களுக்கு வயது நிர்ணயம் செய்தார். ஆனால், அது இன்று நடைமுறையில் இல்லை. மகன் கல்லூரிப் படிப்பை முடித்துவிடுகிறார், ஆனால் தந்தையோ மாணவரணி பொறுப்பில் பணியாற்றி வருகிறார்கள். தயவு செய்து வயதானவர்களுக்கு வேறு பொறுப்புகளை வழங்கிவிட்டு இளைஞர்களுக்கு வாய்ப்புக் கொடுங்கள்.

இளைஞர்களை, இளம்பெண்களை ஊக்குவித்தால் மட்டுமே கழகம் உற்சாகம் அடையும். வீரியமாய் வளரும். அனுபவம் வழிநடத்த வேண்டும். வழிவிட வேண்டும். வழிவிட மறுத்தால் நஷ்டம் கழகத்திற்கே!” என்று பூங்குன்றன் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

click me!