கோவையில் திமுக எந்த காலத்திலும் கொடிநாட்ட முடியாது..! இந்த தேர்தலிலும் திமுகவிற்கு மரண அடி

By karthikeyan VFirst Published May 2, 2021, 1:02 PM IST
Highlights

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 140 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகித்தாலும், கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது திமுக.
 

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன. திமுக முன்னிலை வகிக்கும் 117 தொகுதிகள் உட்பட திமுக கூட்டணி மொத்தமாக 142 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 91 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

வழக்கம்போலவே திமுக அதன் கோட்டையான சென்னையில் ஆதிக்கம் செலுத்துகிறது. சென்னையில் கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கும் நிலையில், அதிமுக அதன் கோட்டையாக திகழும் கோவையை விட்டுக்கொடுக்கவில்லை.

அதிமுகவின் கோட்டையாக திகழும் கொங்கு மண்டலத்தில் இந்த முறை திமுக ஆதிக்கம் செலுத்த வாய்ப்பிருப்பதாக கருத்துகணிப்புகள் தெரிவித்தன. ஆனால் கோவை உட்பட கொங்கு மண்டலத்தின் பெரும்பாலான தொகுதிகளில் மீண்டும் அதிமுகவே ஆதிக்கம் செலுத்துகிறது. 

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், 2011 சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வென்றிராத திமுக, 2016 சட்டமன்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த முறை கோவையில் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை அதிகரித்த நினைத்த திமுகவிற்கு மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. 

கோவையில் உள்ள 10 தொகுதிகளில் மேட்டுப்பாளையம் தொகுதியில் மட்டுமே திமுக முன்னிலை வகிக்கிறது. கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகிக்கிறார். மற்ற 8 தொகுதிகளிலும் அதிமுகவே முன்னிலை வகிக்கிறது.

கடந்த முறை சிங்காநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ கார்த்திக், இந்த முறை அதிமுக வேட்பாளர் ஜெயராமனின் மண்ணை கவ்வுவது உறுதியானதையடுத்து, 3ம் சுற்று வாக்கு எண்ணும்போதே வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறினார்.

திமுக ஆட்சியையே பிடித்தாலும், கோவை அதிமுகவின் கோட்டை தான் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
 

click me!