சீன அதிபருக்குக் கடிதம் எழுதுங்கள்... தப்லிக் ஜமாத்துக்கும் எழுதுங்கள்... கமலை காட்டமாக விமர்சித்த நடிகை!

By Asianet TamilFirst Published Apr 7, 2020, 7:52 PM IST
Highlights

"பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது இப்போது ஒரு டிரெண்ட் ஆகிவிட்டது. நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஒற்றுமையை ஞாயிற்றுக்கிழமையைக் காட்டினார்கள். அதில் நீங்கள் பங்கேற்கவில்லை என்பது உங்களுக்கு உறுத்தவில்லையா? தற்போது மத்திய- மாநில அரசுகள் கடுமையாக உழைத்து வருகின்றன. எனவே, மேம்போக்காக எழுதாமல், உரிய தகவல்களோடு எழுதுங்கள்” என்று கமலை விமர்சித்து காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிய மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன், சீன அதிபர் ஜின்பிங்குக்கும், தப்லிக் ஜமாஅத்துக்கும் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியைச் சுட்டிக்காட்டுங்கள் என்று பாஜகவைச் சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.


கொரோனாவுக்கு எதிரான போரில் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதை உலகத்துக்கு உணர்த்தும் வகையில் வீட்டு வாசலில் விளக்கேற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பொதுமக்கள் வீடுகளில் விளக்கேற்றினர். இதை விமர்சித்து மக்கள் நீதி மய்ய கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன்  பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் ‘சமைக்கவே மக்களிடம் எண்ணெய் இல்லை; வீட்டில் விளக்கேற்ற முடியுமா?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.


மேலும் கமல் எழுதிய கடிதத்தில், “கடந்த இரு முறை நாட்டு மக்களிடன் நீங்கள் உரையாற்றினீர்கள். இந்தக் கடினமான சூழலில் பிரச்னைகளை சந்தித்துவரும் மக்களைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறீர்கள். சமூகத்தில் அதிகமாக இருக்கும் ஏழை எளிய மக்களைப் புறக்கணித்துவிட்டு பால்கனி மக்களுக்காக இயங்கும் அரசாக நீங்கள் இருக்கிறீர்கள்” எனக் காட்டமாக கடிதத்தில் கமல் குறிப்பிடிருந்தார். இந்தக் கடிதம் ட்விட்டரில் நேற்று வைரலானது.
இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த காயத்திரி ரகுராம், கமலுக்கு பதில் அளிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “நீங்கள் ஏன் சீன அதிபர் ஜின்பிங்குக்கும், தப்லிக் ஜமாஅத்துக்கும் கடிதம் எழுதி அவர்களின் தோல்வியை சுட்டிக்காட்டக் கூடாது? அரசின் உத்தரவை மதிக்காத, கீழ்படியாமல் இருக்கும் பொறுப்பற்ற குடிமக்களுக்கு கடிதம் எழுதுங்களேன். தமிழக முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் தோல்வியடைந்தார்கள் என்றும் நீங்கள் கூறுகிறீர்களா? தமிழக எம்.எல்.ஏ., எம்.பி.,க்களுக்கு முதலில் கடிதம் எழுதி அவர்களிடமும் முறையிடுங்கள்.


பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவது இப்போது ஒரு டிரெண்ட் ஆகிவிட்டது. நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் ஒற்றுமையை ஞாயிற்றுக்கிழமையைக் காட்டினார்கள். அதில் நீங்கள் பங்கேற்கவில்லை என்பது உங்களுக்கு உறுத்தவில்லையா? தற்போது மத்திய- மாநில அரசுகள் கடுமையாக உழைத்து வருகின்றன. எனவே, மேம்போக்காக எழுதாமல், உரிய தகவல்களோடு எழுதுங்கள்” என்று கமலை விமர்சித்து காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார்.

click me!