மகன், மகளுடன் ஏரிக்கரைகளில் பனை விதைகளை நட்ட நடிகர் மன்சூர் அலிகான்… குவியும் பாராட்டு !!

By Selvanayagam PFirst Published Sep 3, 2018, 11:30 AM IST
Highlights

சென்னை  சோழிங்நல்லுரை அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஏரிக்கரைகளில் நடிகர் மன்சூர் அலிகான் தனது மகன் மற்றும் மகளுடன் வந்து பனை விதைகளை நட்டார். 2000 ற்கும் மேற்பட்ட பனை விதைகளை ஆர்வத்துடன் நட்ட மன்சூர் அலிகான் மற்றும் அவரது மகன், மகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

தமிழ் சினிமாவில் கொடூர வில்லன், முரட்டு கதாபாத்திரம் என்றாலே நம் அனைவரின் நினைவுக்கு வருவது கண்டிப்பாக நடிகர் மன்சூர் அலிகானாகத்தான் இருக்கும்.  பார்ப்பதற்கும் முரட்டுத் தனமாக இருக்கும் மன்சூர் அலிகான் உள்ளம் மிக மென்மையானது.

பெரும்பாலும் பொது மக்கள் மற்றும் சமுதாய சிந்தனைகள்தான் அவர் உள்ளத்தில் எப்போதும் இருக்கும். அநியாயம் என்று தன் மனதில் பட்டால் உடனடியாக போராட்டக் களத்தில் இறங்கிவிடுவார் மன்சூர் அலிகான். இதனால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அவர் நடத்திய  போராட்டம் அனைவரையும் பாராட்ட வைத்தது. இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி இவர் போராட்டம் நடத்தியதால் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே போன்று சென்னை-சேலம் 8 வழிச்சாலையை எதிர்த்து சேலத்தில் பேசியதற்காக மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இயற்கையை அழித்தால் நாம் அழிந்து போவோம் என்று முழங்கிய அவர், மரம் வளர்ப்போம் என பொது மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று சென்னை  சோழிங்நல்லுரை அடுத்த பள்ளிக்கரணை பகுதியில் உள்ள ஏரிக்கரைகளில் தனது மகன் மற்றும் மகளுடன் வந்து பனை விதைகளை நட்டார்.

2000 ற்கும் மேற்பட்ட பனை விதைகளை ஆர்வத்துடன் நட்ட மன்சூர் அலிகான் மற்றும் அவரது மகன், மகளுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தொடர்ந்து தமிழகம் முழுவதும் சென்று ஏரிக்கரைகளில் பனை விதைகளை நடப்பவதாக மன்சூர் அலிகான் தெரிவித்தார்.

click me!