
தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் தரப்பில் தியாகராய நகர் துணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் தயாரிப்பாளரான ஆர்.பி.சவுத்ரி மீது காவல் துறையில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.பி.சவுத்ரி தயாரிப்பாளர் மற்றும் விநோகிஸ்தராக மட்டும் அல்லாமல் திரைப்படங்களுக்கு பைனான்ஸ் தொழிலையும் செய்து வருகிறார்.
இவரிடம் நடிகர் விஷால் தனது படத் தயாரிப்புகளுக்காக கடன் பெற்றதாகவும், அக்கடனை சென்ற பிப்ரவரி மாதமே முறைப்படி அளித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. கடனுக்காக விஷால் தரப்பில் கையொப்பமிட்டு அளிக்கப்பட்ட ப்ரோ நோட் உள்ளிட்ட ஆவணங்களை தற்போது வரை ஆர்.பி.சவுத்ரி தரப்பு திருப்பி அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இது குறித்து ஆர்.பி சௌத்ரியிடம் விஷால் தரப்பு கேட்டதற்கு, ப்ரோ நோட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தொலைந்து விட்டதாக கூறி, அதற்கு பதிலாக 100 ரூ ஸ்டாம் பேப்பரில் புதிய ஒப்பந்தம் ஒன்று எழுதி கொடுத்துள்ளார்.
இதற்கு முன் இது போன்ற நிகழ்வு வேறு ஒரு ஃபைனான்சியரிடம் விஷால் தரப்பிற்கு ஏற்பட்டு, அது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதால் இந்த நிகழ்வும் அது போன்று நடந்துவிடக்கூடாது என்பதற்காக விஷால் சார்பில் அவருடைய மேலாளர் ஹரிகிருஷனன் ஆர்.பி சௌத்ரி மீதான புகார் மனுவை தியாகராய நகர் துணை ஆணையரிடம் அளித்துள்ளார். அந்த புகார் மனுவோடு ஆர்.பி. சவுத்ரி தரப்பு ப்ரோ நோட் மற்றும் இதர ஆவணங்களுக்கு பதிலாக அளித்த 100ரூ ஸ்டாம்ப் ஒப்பந்தத்தின் நகலையும் விஷால் தரப்பினர் இணைத்து வழங்கியுள்ளனர்.