என்னால் கட்சிக்கு பாதிப்பா...? அப்போ திமுகவிலிருந்து விலகிகொள்கிறேன்... ராதாரவி பதிலடி!

By Asianet TamilFirst Published Mar 25, 2019, 8:40 AM IST
Highlights

திமுகவில் இருந்து தற்காலிகமாக நடிகர் ராதாரவி நீக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவிலிருந்து தான் விலகிகொள்வதாக  அறிவித்துள்ளார்.
 

‘கொலையுதிர்காலம்’ என்ற பட ட்ரைலர் விழாவில் நடிகர் ராதாரவி பங்கேற்றார். அந்த விழாவில் நடிகை நயன்தாராவை பற்றி சர்ச்சையாகப் பேசினார். ‘முன்பெல்லாம் நடிகை கே.ஆர். விஜயா மட்டுமே கடவுளாக நடிப்பார். இன்றைக்கு யார் வேண்டுமானாலும் நடிக்கிறார்கள். பார்த்ததும் கையெழுத்து கும்பிடுவதைப் போல இருப்பவர்களும்; பார்த்ததும் கூப்பிடுபவர்கள் போல் உள்ளவர்களும் கடவுள் வேடத்தில் நடிக்கிறார்கள். காரணம் யார் நடித்தாலும் ரசிக்கத் தொடங்கிவிட்டார்கள் ரசிகர்கள்’ என்று ராதாரவி பேசியிருந்தார்.
ராதாரவி பேசிய வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகப் பரவியது. ராதாராவியின் பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  நயன் தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், பாடகி சின்மயி உள்பட பலரும் ராதாரவிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். இந்நிலையில் திமுகவிலிருந்து தற்காலிகமாக ராதாரவி நீக்கப்படுவதாக அக்கட்சி பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்தார்.
இந்நிலையில் இதுபற்றி நடிகர் ராதாரவி விளக்கம் அளித்துள்ளார். அதில், “நடிககை நயன்தாரா குறித்து கொலையுதிர்காலம் பட விழாவில் பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது.  நான் பேசியது நயன்தாரா மனம் புண்படுத்தியிருப்பதாக அறிந்தேன். இதற்காக நான் வருத்தம் தெரிவித்துகொள்கிறேன். நான் தவறாக எதுவும் பேசவில்லை. நான் பேசியது தவறு என்றால், அப்போதே என்னை கூட்டத்தில் கண்டித்திருப்பார்கள். உண்மையைத்தான் பேசினேன். இந்த விஷயத்தில் என்னால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்காக திமுகவிலிருந்து விலகிகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.   

click me!