
’கட்சி தாவல் ’ என்பது இந்திய அரசியல்வாதிகளின் பொதுப்புத்தி. அதிலும் தமிழகத்தில் கேட்கவே வேண்டாம். பிஸ்கோத்து பிரச்னைக்கெல்லாம் மேட்டருக்கெல்லாம் பத்தாவது கட்சியிலிருந்து தாவி பதினோறாவது கட்சியில் இணைவது இங்கிருக்கும் அரசியல்வாதிகளின் வாடிக்கை. ‘அவன் மச்சினிச்சிக்கு மட்டும் ஒன்றிய கழக மகளிரணி செயலாளர், என் மச்சினிச்சிக்கு இணைச்செயலாளர் பதவிதானா? மானத்தை இழந்து எவன்டா இருப்பான் இந்த கட்சியில? தோ பாருங்கடா இன்னைக்கே கெளம்புறேன். என் கூட நாற்பது கவுன்சிலருங்க வர்றாங்க.’ என்று சவடால் விட்டு கட்சி தாவுவதெல்லாம் தமிழகத்தில் சர்வசாதாரணம் அப்பு!
இந்நிலையில் ஜெயலலிதா இறப்பிற்குப் பின் தமிழக அரசியல் சூழல் மிகப்பெரிய ஆச்சரியத்தை உருவாக்கியிருக்கிறது. ஏகப்பட்ட அதிருப்தியாளர்கள் அ.தி.மு.க.விலிருந்து வெளியேறி தி.மு.க.வில் கரைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் நிகழாதது ஆச்சரியம். அதைவிட பெரிய ஆச்சரியம், தி.மு.க.வும் யாரையும் அங்கிருந்து வலைவீசி இழுக்காததுதான். இந்த விஷயத்தில் ஸ்டாலின் பெரும் கண்ணியத்தை கடைப்பிடித்தார் என்றுதான் பெருமையாக சொல்ல வேண்டும்.
இந்நிலையில் இந்த சூழலில் ஒரு திருப்பம் உருவாகியிருக்கிறது. அதுவும் தலைநகர் சென்னையில்.
ஆம்! அ.தி.மு.க.வை சேர்ந்த தென் சென்னை புள்ளி ஒருவர் தி.மு.க.வில் ஐக்கியமாகும் சூழல் உருவாகியிருக்கிறது என்று தகவல்கள் தடதடக்கின்றன. இது தென்சென்னை தி.மு.க. புள்ளியான ஜெ.அன்பழகனை உசுப்பேற்றவே ஸ்டாலினின் ஆதரவு வட்டாரம் போடும் ஸ்கெட்ச் என்கிறார்கள்.
இதிலென்ன உள் அரசியல்? என்கிறீர்களா, இருக்கிறது. அதாவது ஸ்டாலினின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்து ஒரு கட்டத்தில் அவரோடே மோதல் வெடித்து பின் கட்சியை விட்டு வெளியேறியவர் பரிதி இளம் வழுதி. ஜெ., முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தவர் அவரது மறைவிற்குப்பின் அரசியலில் அடையாளம் இழந்து நிற்கிறார். இந்நிலையில் ஸ்டாலினோடு பெரும் கருத்து முரண்பட்டு, அதே நேரத்தில் கட்சிக்குள் இருந்து கொண்டே ஸ்டாலினுக்கு குடைச்சல் கொடுப்பவர் சென்னை மேற்கு மாவட்ட செயலாளரான ஜெ.அன்பழகன்.
சட்டமன்றத்திலும் சரி, கட்சி நிகழ்வுகளிலும் சரி ஸ்டாலின் ஒரு கோடு போட்டு அதற்குள் நிற்க சொன்னால் வேண்டுமென்றே அதைத்தாண்டி ஒரு வட்டம் போட்டு அதில் உட்கார்ந்து அரட்டையடிப்பதுதான் அன்பழகனின் அன்றாட கடமையாக இருக்கிறது. கருணாநிதியின் வெறி ஆதரவாளரான இவரது போக்கு ஸ்டாலினுக்கு துளியும் பிடிப்பதில்லை. அதேவேளையில் கருணாநிதியின் ஆதரவு செல்வாக்கு இருக்கும் தைரியத்தில் அன்பழகனும் ஸ்டாலினிடம் சமரசப்படுவதில்லை.
சூழல் இப்படி போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஜெ.அன்பழகனுக்கு எப்படியாவது ஒரு செக் வைக்க வேண்டுமென்பது ஸ்டாலினை சுற்றி இருக்கும் ஆதரவு கூட்டங்களின் ஆசை. ஏதாவது ஒரு விஷயம் இதற்கு ஏற்றார்போல் கிடைக்காமலா போய்விடும் என்று இவர்கள் தூண்டில் போட்டு காத்திருக்க, வகையாக வந்து சிக்கியிருக்கிறார் ஆளுங்கட்சி புள்ளி ஒருவர்.
விவசாயிகள் பிரச்னையில் தன்னை சந்திக்க நேரம் கேட்ட ஸ்டாலினுக்கு நோ! நோ! சொல்லிவிட்டது பிரதமரின் அலுவலகம். இத்தனைக்கும் தேசிய அளவில் அறியப்பட்ட ஒரு இயக்கத்தின் செயல் தலைவர், தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சி தலைவர். அவரை சந்திக்க மனமில்லாத மோடி ஒரு எம்.எல்.ஏ.வான பன்னீர் செல்வத்திற்கு மிக எளிதாக டைம் வழங்குகிறார். இந்த விவகாரம் தமிழகத்தில் விவாதப்பொருளாகி இருக்கிறது. இது பற்றிய டி.வி. பேட்டி ஒன்றில் ஸ்டாலினுக்கு பிரதமர் நேரம் ஒதுக்காதது தப்புதான் என்று விமர்சனம் வைத்திருக்கிறார் தென்சென்னையை சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகி ஒருவர். இதை கப்பென பிடித்துக் கொண்டனர் ஸ்டாலினின் ஆதரவு படையினர்.
எதிர்கட்சியிலிருந்து கொண்டே ஸ்டாலினுக்கு ஆதரவு குரல் கொடுத்ததற்காக ஆட்களை விட்டு நேரடியாகவே அவருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்கள். கூடவே ‘அண்ணே உங்களுக்கு உங்க கட்சியில சூழல் சரியில்லாதது போல இருக்குது. உங்கள் மாதிரி திறமை சாலிகள்தான் தளபதிக்கு உறுதுணையா நிற்கணுமுன்னு நாங்க ஃபீல் பண்றோம். அடுத்த ஆட்சி தளபதியோடதுதான். அதனால நீங்க ஓ.கே.ன்னா சொல்லுங்க, தளபதிட்ட பேசுறோம். உங்க திறமைக்கு பெருமை சேர்க்கிற மாதிரியான அங்கீகாரத்தோட தளபதி உங்களை அழைச்சுப்பார்.” என்று சைஸாக அவரை நைஸ் பண்ணியிருக்கின்றனர். அந்த மனிதரும் வேண்டாம் என்றோ அல்லது சரி என்றோ நேரடியாக ரியாக்ட் பண்ணவில்லையாம். யோசிப்பார் போல தெரிகிறது.
ஒரு வேளை அவர் கட்சி மாறிவிட்டால் சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க.வில் நிச்சயம் அவருக்கு ஒரு நல்ல இடத்தை ஸ்டாலின் கொடுப்பார் என்றே தெரிகிறது. மேலும் ஸ்டாலினின் முழு ஆதரவும் இருப்பதால் ஜெ.அன்பழகனுக்கு முழு குடைச்சல் தருவது மாதிரியான செயல்களை இவர் செய்யும்படியும் கொம்பு சீவி விடப்படுவார் என்றும் சொல்கிறார்கள்.
ஆனால் ஒன்று! தன்னுடைய இடத்துக்கும், அதிகாரத்துக்கும் ஒரு பிரச்னை என்று வந்தால் ஜெ.அன்பழகன் கமுக்கமாக போய்விடமாட்டார். நின்று கதகளியாடிவிடுவார். எப்படி அழகிரிக்கு கட்சியில் இடைஞ்சல் கொடுத்தபோது மதுரையில் அவரது ஆதரவாளர்கள் அதகளம் செய்தார்களோ அதற்கு இணையான ரவுசு நடக்குமென்கிறார்கள். ஆக மொத்தத்தில் மேற்கு மாவட்ட சென்னையில் கூடிய விரைவில் ஒரு களேபரத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் உ.பி.க்கள்.
அதேநேரத்தில் இங்கேயே நிற்கலாமா? அல்லது தி.மு.க.வுக்கு போயிடலாமா? என்று ஊசலாடும் அந்த ஆளுங்கட்சி நிர்வாகியை தக்க வைக்க எடப்பாடி அணியும், தங்கள் பக்கம் இழுத்துப்போட பன்னீர் அணியும் பாய்ச்சல் காட்டுவது எக்ஸ்ட்ரா எஃபெக்ட்டு!
இதுதாண்டா தமிழ்நாடு அரசியல்!