விஜயதாரணி யாருங்க? அப்படி பேசுறதுக்கு.. கொந்தளித்த திருநாவுக்கரசர்

First Published Feb 13, 2018, 2:34 PM IST
Highlights
action will be take against vijayadharani said thirunavukkarasar


காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக பேசியுள்ள விஜயதாரணி மீது கட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் நேற்று சட்டப்பேரவையில் திறக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டப்பேரவையில் திறக்கக்கூடாது என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஜெயலலிதா பட திறப்பு விழாவையும் புறக்கணித்தனர். 

கட்சியின் உத்தரவுக்கிணங்க ஜெயலலிதா பட திறப்பு விழாவில் கலந்துகொள்ளாத காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி, பின்னர் சபாநாயகர் தனபால் மற்றும் முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

அத்துடன் இல்லாமல், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்ட விஜயதாரணி, ஜெயலலிதா உடல்நல குறைவால் மருத்துவமனையில் இருந்தபோது ராகுல் காந்தி வந்து பார்த்தார். திருநாவுக்கரசர் கூட சென்று பார்த்தார். அப்போது ஜெயலலிதா குற்றவாளி என்று தெரியவில்லையா? என்று பேசினார்.

விஜயதாரணியின் செயலும் பேச்சும் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அதிமுகவிற்கு எதிராக செயல்பட்டு வரும் விஜயதாரணி, அதிமுகவில் இணைவதற்கு கூட வாய்ப்புள்ளதாக கட்சியினர் கருத்து கூறுகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், ராகுல் காந்தியை நோக்கி கேள்வி எழுப்ப விஜயதாரணி யார்? ஒரு எம்.எல்.ஏ என்றால் அதற்கு தகுந்தாற்போல பேச வேண்டும். அளவுக்கு அதிகமாக பேசுகிறார் விஜயதாரணி. படித்தவரான விஜயதாரணி, தெரிந்துதான் அப்படி பேசுகிறாரா? அல்லது தெரியாமல் பேசுகிறாரா? என்பது தெரியவில்லை.

விஜயதாரணியின் பேச்சு மற்றும் செயல்பாடுகள் குறித்து கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்திக்கு அறிக்கை அளிப்போம். விஜயதாரணி மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
 

click me!