ஆர்.என்.ரவியை தரக்குறைவாக விமர்சித்த திமுக பிரமுகர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி! ஆளுநர் மாளிகை எடுத்த அதிரடி முடிவு

By vinoth kumarFirst Published Jan 14, 2023, 10:05 AM IST
Highlights

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறனர். அதேநேரத்தில், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். 

விருகம்பாக்கத்தில் நடந்த திமுக கூட்டத்தில் ஆளுநர் ஆன்.என்.ரவி பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதை அடுத்து அவர் மீது ஆளுநர் மாளிகை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்டது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறனர். அதேநேரத்தில், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் தமிழ்நாடு அரசு பிரதிநிதிகள் குழு சந்தித்து கோரிக்கை மனுவையும், தமிழ்நாடு முதல்வர் எழுதிய கடிதத்தை சீலிட்ட கவரில் வழங்கினர். அதில், ஆளுநருக்கு அறிவுரை கூற வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார். இதனையடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி சென்றுள்ளார். 

இந்நிலையில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். விருகம்பாக்கத்தில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்;- அரசு கொடுத்த உரையை ஒழுங்காக படித்திருந்தால் ஆளுநரை கையெடுத்து கும்பிட்டு அனுப்பி இருப்பேன். ஆனால், அவர் டாக்டர் அம்பேத்கர் பெயரையே சொல்லமாட்டேன் என்று தவிர்த்தால் செருப்பால் அடிப்பேன் என்று சொல்ல எனக்கு உரிமை இருக்கா இல்லையா? அம்பேத்கர் பெயரை சொல்லமாட்டேன் என்று சொன்னால் ஆளுநர் காஷ்மீருக்கு செல்லட்டும்; நாங்களே தீவிரவாதிகளை அனுப்பி சுட்டு கொல்வோம் என்றார்.

இவரது பேச்சு சமூகவலைதளங்களில் வைரலானது. இவரது பேச்சுக்கு தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்து திமுக பிரமுகரை கைது செய்ய வேண்டும் வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில், ஆளுநர் குறித்து அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையருக்கு ஆளுநர் மாளிகை துணை செயலாளர்  பிரசன்னா புகார் அளித்துள்ளார்.

அதில், ஆளுநர் ரவி குறித்து திமுக பேச்சாளர் தகாத வார்தைகளை பேசியுள்ளார். அவருடைய பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதனால், அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124ன் கீழ் குடியரசு தலைவரையோ, ஒரு மாநிலத்தின் ஆளுநரையோ அவரது பணி செய்யவிடாமல் தடுக்கும் வகையில் செயல்படுதல் என்கிற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியுள்ளார். 

click me!