
மகரிஷி சரகர் உறுதிமொழி எடுத்த எல்லா மருத்துவக் கல்லூரி டீன்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவக் கல்வி இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் சம்ஸ்கிருத மொழிபெயர்த்து உறுதிமொழியை எடுத்தனர். இந்த விவகாரத்தில் மதுரை டீன் ரத்தினவேலு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதுதொடர்பாக தமிழக மருத்துவக் கல்லூரி இயக்குநர் தலைமையிலான குழு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. இதன்படி மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தா ராம் ஆகியோர் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் விசாரணை நடத்தினர். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட டீன் ரத்தினவேலு மற்றும் துணை முதல்வர் தனலெட்சுமி, மாணவர் அமைப்பினரிடம் விசாரணை நடந்தது.
விசாரணைக்குப் பின் நாராயண பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், “டீனும் துணை முதல்வரும் கவனக்குறைவாக இருந்துவிட்டதாகச் சொன்னார்கள். விசாரணை விவரங்களை அறிக்கையாக தயார் செய்து அரசுக்கு அனுப்புவோம். நான் உட்பட அனைத்து மருத்துவர்களுமே பாரம்பரிய உறுதிமொழியை எடுத்துதான் பணிக்கு வந்துள்ளோம். காலங்காலமாக நடக்கும் உறுதிமொழியை மாற்றும் முன் சுகாதாரத் துறைச் செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குநரிடம் கேட்டு தெளிவு பெற்றிருக்க வேண்டும். தேசிய மருத்துவக் கவுன்சில் ‘மகிரிஷி சரகர்’ உறுதிமொழியைப் பரிந்துரைத்து சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால், உத்தரவு எதுவும் போடவில்லை.
அதனால், சுகாதாரத் துறை, மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனுப்பும் சுற்றறிக்கை, உத்தரவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும், மற்ற எதையும் பின்பற்றக் கூடாது என பிப்ரவரி 11-ஆம் தேதியில் சுகாதாரத் துறைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையை அனைத்துக் கல்லூரி முதல்வர்களும் பார்த்து சரியென பதிலும் அனுப்பியிருந்தனர். அப்படி இருக்க, இந்த தவறு நடந்திருக்கிறது. விசாரணை அறிக்கையை அரசின் பார்வைக்குக் கொண்டு செல்வோம். மதுரை மட்டுமல்ல, அரசு, தனியார் கல்லூரிகளில் எங்கெங்கு தவறு நடந்துள்ளதோ அங்கெல்லாம் விசாரித்து அக்கல்லூரிகள் மீதும் உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இது முதற்கட்ட விசாரணைதான். தேவைப்பட்டால் மற்றொரு விசாரணையும் மேற்கொள்வோம்.” என்று நாராயண பாபு தெரிவித்தார்.