Captain Vijayakanth: திமுக-அதிமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கேப்டன் விஜயகாந்த்.! கடந்து வந்த அரசியல் பாதை

By Ajmal Khan  |  First Published Dec 28, 2023, 9:53 AM IST

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக- அதிமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த விஜயகாந்த், திமுகவை வீழ்த்தி தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக இருக்கையை அலங்கரித்தவர். 


விஜயகாந்தின் சினிமா பயணம்

'நாராயணன் விஜயராஜ் அழகர்சுவாமி' என்ற இயற்பெயர் கொண்டுள்ள இவர், தமிழ் சினிமாவில் விஜயகாந்த் என்ற பெயரில் அறியப்படுகிறார். விஜயகாந்த் 1979ம் ஆண்டு 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2015ம் ஆண்டு வரை 150க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்து பிரபலமானவர். இவருக்கு தமிழ் சினிமாவில் "புரட்சி கலைஞர்' என்னும் பட்டம் உண்டு. கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் கேப்டன் என்ற பட்டத்தை பெற்றார்.

Tap to resize

Latest Videos

 

அரசியலில் கலக்கிய விஜயகாந்த்

சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் போதே தனது ரசிகர் மன்றத்தால் பொதுமக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார். 2005 ஆம் ஆண்டு லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் மாநில அரசியல் கட்சியை துவங்கினார். மக்களுடனும் தெய்வத்துடன் மட்டுமே கூட்டணி என அறிவித்து தேர்தலை எதிர்கொண்டவர். விஜயாந்த் மீது மக்களின் நம்பிக்கையால் திமுக- அதிமுகவிற்கு சிம்ப சொம்பனமாக திகழ்ந்தார். இரண்டு கட்சிக்கும் மாற்றாக தமிழகத்தில் உருவெடுத்தார். 2006 சட்டமன்ற தேர்தலில், தேமுதிக தனித்து போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை அதிகரித்த விஜயாகந்த் விருத்தாசலம் தொகுதியில் வெற்றி பெற்றார். சட்டமன்றத்தில் முதல் முறையாக தனி மனிதனாக நுழைந்தார். 

எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தை பெற்ற விஜயகாந்த்

இதனையடுத்து விஜயகாந்தின் அரசியல் வாழ்க்கை உச்சத்தை சென்றது. நாடாளுமன்ற தேர்தலிலும் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் எதிர்கட்சிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு இவரது கட்சி 29 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார்.  2006 முதல் 2016 வரை தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவராகவும் இருந்தார். தமிழகத்தில் தி.மு.கவையும், கருணாநிதியையும் பின்னுக்கு தள்ளி, சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக கம்பீரமாக அமர்ந்த புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த்.

ஜெயலலிதாவுடன் நேருக்கு நேர் மோதல்

இதனையடுத்து சட்டமன்றத்தில் ஜெயலிலதாவிற்கும் விஜயகாந்திற்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. யாரால் யார் வெற்றி பெற்றார்கள் என்ற மோதல் உச்சகட்டத்தை அடைந்தது. அப்போது ஜெயலலிதா சட்டமன்றத்தில் விஜயகாந்தை நோக்கி இனி தேமுதிகவிற்கு இறங்கு முகம் தான் என ஆவேசமாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றன் பின் ஒன்றாக அதிமுகவில் இணைய தொடங்கினர். நம்பிக்கைக்குரியவராக இருந்த நடிகர் அருண்பாண்டியன், மா.பா பாண்டியன் உள்ளிட்டவர்களும் அதிர்ச்சி கொடுத்தது விஜயாந்தின் உடல்நிலையில் பின்னடைவை சந்தித்தது. 

டெபாசிட்டை இழந்த தேமுதிக

இந்தநிலையில் 2016ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க திமுக தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் மக்கள்நல கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்த தேமுதிக மாவட்ட செயலாளர்கள் திமுக கூட்டணியை விரும்பினர். ஆனால் இதற்கு விஜயகாந்த் ஒத்துக்கொள்ளாத காரணத்தால் அந்த கட்சியின் முக்கிய மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்து போட்டியிட்டனர்.  மக்கள் நல  கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிட்டது. ஆனால் போட்டியிட்ட 234 தொகுதிகளிலும் இந்த கூட்டணி டெபாசிட் இழந்தது. 

காலமானார் விஜயகாந்த்

இதனை தொடர்ந்து விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து வெளிநாடுகளில் சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருந்த போதும் முன்பை போல் அரசியலில் சுறு சுறுப்பாக செயல்படமுடியாத நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களில் தேமுதிகவின் வாக்கு சதவிகிதம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தநிலையில் தான் விஜயகாந்திற்கு நிம்மோனியா பாதிப்பால் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். 

இதையும் படியுங்கள்

Captain vijayakanth: கேப்டன் விஜயகாந்த் மறைவு! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கண்ணீரில் தேமுதிக தொண்டர்கள்.!
 

click me!